
விஜய் அதிமுக கூட்டணியில் இணைந்தால் அவருக்கு நல்லது என தமிழ் மாநில முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் ஷேக் தாவூத் அட்வைஸ் கூறினார்.
திமுகவும், பாஜகவும் திரைக்குப் பின்னால் கூட்டணியில் இருந்து கொண்டு மத பிரச்சனைகளை தமிழ்நாட்டில் ஏற்படுத்த முயற்சிப்பதாக தமிழ் மாநில முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் சேக் தாவூத் குற்றம் சாட்டியுள்ளார். திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை குறிப்பிட்டு அவர் இதனை தெரிவித்தார்.
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின் நிறுவனத் தலைவர் ஷேக் தாவூத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் ஷேக் தாவூத் பேசுகையில்,
திமுக ஆட்சியில் பால் விலை, மின்கட்டணம், சொத்துவரி என அத்தியாவசிய சேவைகள் அனைத்துக்கும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சாமானிய மக்கள் நாள்தோறும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். வழக்கமாக திமுக ஆட்சி கால கட்டங்களில் இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கு இருந்து வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்தை நோக்கி மக்கள் நகரத் தொடங்கி இருக்கிறார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவதற்காக இஸ்லாமிய மக்களை சந்தித்து ஆதரவு கேட்க கோவையில் இருந்து பயணத்தை துவங்கி இருக்கிறேன். கோவையில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஜமாத்துகளை சந்தித்து பேசியுள்ளோம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் இஸ்லாமிய மக்கள் தவறு செய்து விட்டதை உணர்ந்து இருக்கின்றனர். பாஜகவும் திமுகவும் மறைமுகமாக ஒரே அணியில் இருந்து செயல்படுவதை புரிந்து கொண்டுள்ளனர். எனவே 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக தெரிவித்து இருக்கின்றனர். ஒரு சில இஸ்லாமிய அரசியல் இயக்கங்கள் தங்களது சுயநலத்திற்காக திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் திமுக மற்றும் பாஜக இணைந்தே மதப் பிரச்சனையை உருவாக்க முயற்சிக்கிறார்கள். ஒற்றுமையாக வாழும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். பாஜக இந்துக்களின் வாக்குகளை ஒன்றிணைப்பதற்காகவும், திமுக சிறுபான்மையினரின் வாக்குகளை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள். திருப்பரங்குன்றம் மலை அனைத்து சமூக மக்களுக்கானது தமிழகத்தில் மத கலவரங்களை திணித்து விட முடியாது. திமுக கூட்டணி கட்சிகள் தற்போது அரசை நோக்கி கேள்வி எழுப்பி வருகிறார்கள். தேர்தலுக்கு 3 மாதங்கள் இருக்கும்போதுதான் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் துவங்கும். அதனை இப்போது இருந்து விவாதிக்க தேவையில்லை. கூட்டணிகளில் பொருத்தவரை கட்டாயம் மாற்றங்கள் இருக்கும்.
நடிகர் விஜயகாந்துக்கு இருந்ததைப் போன்று மக்கள் செல்வாக்கு
விஜய்க்கு இருப்பதாக தெரியவில்லை. விஜய் தனித்து நின்றாலும் அதிமுகவின் வெற்றியை தடுக்க முடியாது. அவர் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து கொண்டால் கணிசமான இடங்களை வெல்ல முடியும் என தெரிவித்தார்.

