

முல்லைப் பெரியாறு அணையில் மராமத்து பணிகளுக்கு பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கும் கேரள வனத்துறை மற்றும் கேரள பொதுப் பணித் துறையினரை கண்டித்து, இன்று (பிப்.25) நடைபெற்ற துணைக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்திலிருந்து, தமிழக அதிகாரிகள் வெளி நடப்பு செய்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முல்லைப் பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க உச்ச நீதி மன்றம் மத்திய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளர் குல்சன் ராஜ் தலைமையிலான மூவர் கண்காணிப்பு குழுவை அமைத்தனர். இக்குழுவிற்கு உதவியாக துணை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக தற்போது கொச்சியிலுள்ள மத்திய நீர்வள ஆணைய செயற் பொறியாளர் சரவணக்குமார் உள்ளார். தமிழக பிரதிநிகளாக முல்லைப் பெரியாறு சிறப்பு கோட்ட செயற் பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற் பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகளாக கட்டப்பனை நீர்ப்பாசன செயற் பொறியாளர் ஹரிக்குமார், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று அணையின் நீர்மட்டம் 129.45 அடியாக குறைந்துள்ள நிலையில், அணையில் செய்யப்பட வேண்டிய வழக்கப் பணிகள் செய்வது குறித்து துணைக் கண்காணிப்பு குழுவினர் முல்லைப் பெரியாறு அணையில் இன்று ஆய்வு செய்தனர்.
மெயின் அணை, பேபி அணை, கேலரிப் பகுதி, சீப்பேஜ் வாட்டர் (கசிவுநீர்) குறித்து குழுவினர் ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து, துணைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலையில் குமுளியிலுள்ள கண்காணிப்பு குழுவின் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டம் தொடங்கியதும், தமிழக அதிகாரிகள், குழு தலைவர் சரவணக் குமாரிடம் கடிதம் ஒன்றை கொடுத்தனர். பின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், கண்காணிப்பு குழு அனுமதி வழங்கியும், முல்லைப் பெரியாறு அணையில் மராமத்து பணிகளுக்கு பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கும் கேரள வனத்துறை மற்றும் கேரள பொதுப்பணித் துறையினரின் செயல்களை கண்டித்து, துணைக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்திலிருந்து வெளி நடப்பு செய்தனர். இதையடுத்து 5 நிமிடத்தில் குழுத் தலைவர், கேரளத் தலைவர்கள் கூட்டம் முடித்து வெளியேறினர். தமிழக அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
