

தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மாலை நேரம் துவங்கி விட்டாலே ‘கொசுத் தொல்லை தாங்க முடியல’ என புலம்பியதையடுத்து, அங்கும் கொசு மருந்து அடிக்கப்பட்ட பரிதாபம் காணப்பட்டது.
இந்த நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டு குடியிருப்பு பகுதிகளில் மினி வாகனம் மூலம் கொசு மருந்து புகை அடிக்கப்பட்டு வருகிறது. மாலை 4 மணிக்கு மேல் இந்த வாகனங்கள் கொசு மருந்து புகை கக்கியவாறு மெயின் ரோடு, குடியிருப்பு பகுதிகளில் வலம் வருவதை காணமுடியும். இந்த வாகன சவுண்ட் கேட்டாலே பலர் தலை தெறிக்க ஓடி ஒலிந்து கொள்வதும் உண்டு. காரணம் கொசு மருந்து புகை பலருக்கு ஒத்துக் கொள்ளாது. நகராட்சி அலுவலக முன்புறம், பக்கவாட்டு பகுதிகளில் கழிவு நீர் சாக்கடை அமைந்துள்ளது. இதனால் மாலை நேரம் துவங்கிவிட்டாலே, நகராட்சி அலுவலகம் நோக்கி கொசுக்கள் படையெடுக்க துவங்கிவிடுகின்றன. இதில் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. இதனால் அங்கும் கொசு மருந்து அடித்த பரிதாபம் காணப்பட்டது.
நகராட்சி பணியாளர் ஒருவர் கூறுகையில், ‘சில நாட்களாக மாலை 4 மணிக்கு மேல் கொசுத் தொல்லை அதிகமாக இருந்தது. இதனால் மாலை நேரங்களில் சீக்கிரம் சீட்டை விட்டு வெளியேறி விடுவோம். பணியாளர்கள் நலன் கருதி அலுவலகத்திலும் கொசு மருந்து அடிக்கப்பட்டது. இப்போது நிம்மதியுடன் பணிபுரிந்து வருகிறோம், என்றார்.

