தண்ணீர் தொட்டியில் தேசியக்கொடியின் மூவர்ணத்தை பூசி தேச ஒற்றுமையை ஏற்படுத்திய ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம், கே.நெடுவயல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. அதாவது, அப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் விதமாக மாவட்ட நிர்வாக நிதியில் இருந்து புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக புதிதாக கட்டப்படும் நீர்தேக்கத் தொட்டில் வண்ணம் பூசப்பட்டு திட்டங்கள் குறித்து எழுதப்படும். ஆனால், ஊர் மக்களுக்கு தேசப்பற்றையும் ஒற்றுமையையும் உருவாக்கும் விதமாக தேசிய கொடியில் உள்ள மூவர்ணத்தை பூசும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது பலரது கவனத்தை பெற்றுள்ளது.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பலதரப்பட்ட சமுதாய மக்கள் இப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழவும், அவர்களுக்கு மத்தியில் நாட்டுப்பற்றையும், தேச ஒற்றுமை உணர்வையும் ஏற்படுத்தும் ஒரு முயற்சியாக நம் நாட்டின் தேசிய கொடியின் வர்ணத்தை இந்த நீர்த்தேக்க தொட்டியில் ஏற்படுத்தி உள்ளதாக கூறினர்.
இதேபோல், இன்னும் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு கட்டிடங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களில் இத்தகைய வர்ணங்களைப் பூசி கிராமமக்களிடையே மதசார்பற்ற சமுதாய ஒற்றுமையை ஏற்படுத்துவதே எனது நோக்கமாகும் என்று ஊராட்சி மன்ற தலைவர் கூறினார். ஊராட்சி மன்ற தலைவரின் இத்தகைய முயற்சி வியக்கத்தக்கது என சமூக ஆர்வலர்களும், அறிஞர் பெருமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.