• Tue. May 30th, 2023

தமிழகத்தில் இரவு நேரத்தில் அதிக பட்டாசுகள்: அதிகரித்த காற்றுமாசுபாடு

Byமதி

Nov 5, 2021

தீபாவளி பண்டிகையையொட்டி இரவு நேரத்தில் அதிகளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், தமிழகம் முழுவதும் உள்ள நகரங்களில் காற்றின் மாசுபாடு அதிகரித்துள்ளது.

காற்று மாசுபாடு குறித்து உலக சூழலியல் அமைப்போடு தனியார் தன்னார்வ அமைப்பு இணைந்து நடத்தி வரும் காற்று மாசுபாட்டின் அளவீடுகள் மூலமாக இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.

அதன்படி, மிக அதிகபட்சமாக திருச்சியில் 321, வேலூரில் 318 என்கிற அளவில் தற்போது வரை பதிவாகியுள்ளது. இதையடுத்து, அதிகபட்சமாக சேலத்தில் 275 என்கிற அளவிலும், திருப்பூரில் 233 என்கிற அளவிலும் உள்ளது. தூத்துக்குடியில் 45 என்கிற அளவில் மிகவும் குறைவாக பதிவாகியுள்ளது. மதுரையில் 188 குறியீடு என்கின்ற அளவில் உள்ளது. கோவையில் 178 என்கிற அளவிலும் உள்ளது.

சென்னையில் இரவு 7 மணி முதல் 8 மணி வரை இரவு நேரத்தில் பட்டாசு வெடிப்பதற்கான அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்களால் இரவு நேர நேரத்தில் அதிக வெடிகள் வெடிக்கப்பட்டன. இதனால் தற்போது சென்னை நகரின் காற்று மாசுபாட்டின் அளவு மிதமான நிலையில் இருந்து “மோசம்” என்கிற நிலைக்கு சென்றுள்ளது. தற்போது சென்னை நகரில் காற்று மாசுபாட்டின் அளவு 100 முதல் 150 என்கிற அளவில் உள்ளது, இது மோசமான அளவாகும்.

அதிகபட்சமாக வட சென்னையில் உள்ள மணலியில் 344 குறியீடும், நுங்கம்பாக்கத்தில் 272 என்கிற குறியீடும் உள்ளது. பொத்தேரியில் 151 ம், அம்பத்தூரில் 150 என்கிற அளவில் உள்ளது. வட சென்னையை விட தென் சென்னையில் காற்று மாசுபாடு அளவு குறைவாகவே உள்ளது. தீபாவளி பண்டிகையான இன்று மதியம் வரை சென்னை நகரில் காற்று மாசுபாட்டின் அளவு 100-க்கும் குறைவாக மிதமான அளவில் இருந்த நிலையில் இரவு நேர பட்டாசு வெடித்தல் தற்போது காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *