• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு பெயர் சூட்டிய மோடி..!

Byவிஷா

Aug 26, 2023

நிலவில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறங்கிய இடத்திற்கு பிரதமர் மோடி ‘சிவ்சக்தி பாய்ண்ட்’ எனப் பெயர் சூட்டியுள்ளார்.
சந்திரயான்-3 திட்டத்திற்கு பின்னால் உள்ள விஞ்ஞானிகளை வாழ்த்துவதற்காக பெங்களூருவில் உள்ள இஸ்ரோ டெலிமெட்ரி டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க்கில் பிரதமர் மோடி இன்று காலை வருகை தந்தார். அப்போது, அவர் இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்ளிட்ட அனைத்து விஞ்ஞானிகளை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்..,
“நிலவில் தொடும் இடத்திற்கு பெயரிடுவது ஒரு வழக்கம். மேலும் இந்தியாவும் இப்போது விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு பெயரிட முடிவு செய்துள்ளது. அந்த இடம் இனி ‘சிவ் சக்தி பாயிண்ட்’ என்று அழைக்கப்படும். ‘சிவ் சக்தி’ என்ற பெயரில் உள்ள ‘சக்தி’ பெண் விஞ்ஞானிகளின் கடின உழைப்பு, உத்வேகம் மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றிலிருந்து வந்தது,” என்றார்.
கூடுதலாக, 2019இல் சந்திரயான் -2 விபத்துக்குள்ளான நிலவில் உள்ள இடத்திற்கு ‘திரங்கா பாயிண்ட்’ என்று பெயரிடப்பட்டது. “சந்திரயான் -2 இன் விக்ரம் லேண்டர் விபத்துக்குள்ளான இடத்திற்கு பெயரிடவும் இந்தியா முடிவு செய்துள்ளது. அது சரியாக தரையிறங்காததால் அந்த புள்ளிக்கு பெயரிட வேண்டாம் என்று இந்தியா முடிவு செய்திருந்தது. ஆனால் இன்று, சந்திரயான் -3 மிஷன் வெற்றிகரமாக தரையிறங்கியது.
சந்திராயன் 1, சந்திராயன்-2 முத்திரை பதித்த இடத்திற்கு ஒரு பெயரை அர்ப்பணிக்க வேண்டிய தருணம் இதுவே ஆகும். இப்போது நம்மிடம் “ஹர் கர் திரங்கா” இருப்பதாலும், திரங்கா (இந்திய தேசிய கொடி) சந்திரனில் கூட இருப்பதால், அந்த இடத்திற்கு ‘திரங்கா பாயிண்ட்’ என்று பெயரிடுவது மட்டுமே பொருத்தமானது. நிலவின் மேற்பரப்புடன் இந்தியாவின் முதல் தொடர்பு இது” என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
தொடர்ந்து மற்றொரு அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி, சந்திரயான்-3 தரையிறங்கிய ஆகஸ்ட் 23ஆம் தேதி, தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என்றார். “அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை கொண்டாடும் நாளாக இது இருக்கும், மேலும் இது அடுத்த தலைமுறைகளை ஊக்குவிக்கும்” என்றார்.
ISTRAC-ல் பிரதமரை இஸ்ரோ தலைவர் சோமநாத் மற்றும் பிற விஞ்ஞானிகள் வரவேற்றனர். விண்வெளி ஆய்வகத்தின் விஞ்ஞானிகளிடம் உரையாற்றிய பிரதமர், “நீங்கள் அனைவரும் சாதித்தது இந்த சகாப்தத்தின் மிகவும் ஊக்கமளிக்கும் தருணங்களில் ஒன்றாகும். இந்த சாதனைக்குப் பிறகு, ஒட்டுமொத்த உலகமும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் திறனைப் புரிந்துகொண்டுள்ளது” என்றார்.
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜூலை 14ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கு ஜிஎஸ்எல்வி மார்க் 3 (எல்விஎம் 3) கனரக ஏவுகணை பயன்படுத்தப்பட்டது.

பூமி மற்றும் சந்திரனைச் சுற்றி 40 நாள் சுற்றுப்பாதை பயணத்திற்குப் பிறகு, சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், கடந்த புதன்கிழமை (ஆக. 23) மாலை 6.04 மணிக்கு, நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. அதன்மூலம், நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடாக இந்தியா சாதனை படைத்தது. மேலும், அமெரிக்கா, சோவியத் யூனியன், சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தப்படியாக இந்தியா நிலவில் தடம் பதித்துள்ளது.