இந்த பட்ஜெட் தேசத்திற்கு புதிய ஆற்றலையும் நம்பிக்கையையும் அளிக்கும். அத்துடன் மக்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என நம்புகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு அவைகளிலும் இன்று தொடங்குகிறது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து 8வது முறையாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (பிப்ரவரி 1) தாக்கல் செய்கிறார்.
இந்த நிலையில் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நமது நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை மா லட்சுமி தொடர்ந்து ஆசீர்வதிக்க வேண்டும். இந்திய ஜனநாயக நாடாக 75வது ஆண்டுகளை நிறைவு செய்தது பெருமைக்குரிய விஷயம்.
உலக அரங்கில் இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. மூன்றாவது ஆட்சியில் முதல் முழு பட்ஜெட் அறிக்கை இது. 2047ம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, வளர்ந்த நாடு என்ற இலக்கை அடையும். இந்த தொடரில் ஏராளமான மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. மக்களின் மேம்பாட்டுக்காக நாள்தோறும் பணியாற்றி வருகிறோம். மூன்றாவது முறையாக மக்கள் ஆட்சி செய்வதற்கு வாய்ப்பளித்துள்ளனர். இந்த பட்ஜெட் தேசத்திற்கு புதிய ஆற்றலையும் நம்பிக்கையையும் அளிக்கும். அத்துடன் மக்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என நம்புகிறேன். அனைவருக்குமான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெறும்.
என்று தெரிவித்தார்.