• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

செல்போன் சார்ஜ் வெடித்து படுக்கை, மற்றும் பொருட்கள் சேதம்..,

ByRadhakrishnan Thangaraj

Jun 20, 2026

ராஜபாளையம் தெற்கு பொன்னகரம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் ராஜேஷ்கண்ணன் (34). இவர் கப்பலில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார் . விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். இவரது மனைவி கஜலட்சுமி வெளி ஊருக்குச் சென்றுள்ள நிலையில், ராஜேஷ் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். ராஜேஷின் மொபைல் போனில் சார்ஜ் முற்றிலும் குறைந்ததையடுத்து, அவர் தனது செல்போனை சார்ஜரில் மாட்டியுள்ளார்.

ஆனால், பாதுகாப்பான இடத்தில் வைக்காமல், அலட்சியமாக படுக்கை மெத்தையின் மீதே செல்போனை வைத்துவிட்டு, வீட்டைப் பூட்டிவிட்டு வெளியில் சென்றுள்ளார். சற்று நேரத்தில், மெத்தையின் மீது சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த செல்போன், அதிக வெப்பம் காரணமாக திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. மெத்தை எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள் என்பதால், தீ அடுத்த சில நிமிடங்களிலேயே கொழுந்துவிட்டு எரிந்து, ஏசி மற்றும் மின்சாதன பொருட்கள் இருந்து சேதமாகின. அறைகள் முழுவதும் பரவத் தொடங்கியது.

வீட்டின் ஜன்னல் வழியாக கரும்புகையும் தீப்பொறியும் வெளியாவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக ராஜபாளையம் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், வீட்டின் உள்ளே பரவிய தீயை அணைத்து சமையல் எரிவாயு இருக்கும் சமையலறைக்கு தீ பரவாமல் தடுக்கும் பொருட்டு கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீயணைப்புத் துறையினரின் விரைவான நடவடிக்கையால் தீ மற்ற வீடுகளுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டு, பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சம்பவம் குறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.