• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

மமக பதிவு ரத்து?  ஸ்டாலின்தான் காரணம்! கூட்டணிக்குள் புகை!

உங்கள் பதிவை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட 5 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 29ன் கீழ் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சிக்கு  வருமான வரி விலக்கு, அங்கீகாரம் (தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு பத்தி 6), பொது தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை (தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு பத்தி 108) அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள், நட்சத்திர பிரசார நியமனம் ஆகிய சலுகைகள் அளிக்கப்படும்.

ஆனால், கட்சியின் சொந்த சின்னத்தில் வேட்பாளர்களை 6 ஆண்டுகளுக்கு மேல் தேர்தலில் நிறுத்தவில்லை என்றால், அந்த கட்சியின் பதிவை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்யும்.

அதன்படிதான் மனிதநேய மக்கள் கட்சி.  கோகுல மக்கள் கட்சி, இந்தியன் லவ்வர்ஸ் பார்டி, இந்தியன் மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், மக்கள் தேசிய கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த  கட்சிகள் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளாக எந்த ஒரு தேர்தலிலும் வேட்பாளர்களை போட்டியிடவில்லை. எனவே, மேற்குறிப்பிட்டுள்ள கட்சிகளுக்கு சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு செயலர்  12.08.2025 அன்று,  “தங்கள் கட்சியின் பதிவினை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்கான காரணத்தினை தலைமை தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் வரும் 26.08.2025-ம் தேதியன்று நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும்” என்று  நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,

இந்த கட்சிகளில் மனித நேய மக்கள் கட்சி இப்போது இரு எம்.எல்.ஏ.க்களைப் பெற்றுள்ளது.

அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பாபநாசம் தொகுதியிலும், பொதுச் செயலாளர் சமது மணப்பாறை தொகுதியிலும் திமுக கூட்டணியில் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றனர்.

நாம் தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸ் குறித்து மமக நிர்வாகிகள் மத்தியில் பேசியபோது,

 “பல ஆண்டுகளாக மமக தொண்டர்களின் குரலைத்தான் இன்று தேர்தல் ஆணையம் எதிரொலித்துள்ளது.

2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் மனித நேய மக்கள் கட்சி கூட்டணி வைத்தோம். அப்போது ஜெயலலிதா  அவர்கள் முதல் முறையாக எங்களை தனிச் சின்னத்தில் நிற்க அனுமதித்தார்கள்.  

அந்த தேர்தலில்  2011 அதிமுக கூட்டணில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் 3 தொகுதிகளில் மமக போட்டியிட்டோம்.

ராமநாதபுரம்,  ஆம்பூர்,  சேப்பாக்கம்  ஆகிய தொகுதிகளில் நின்றோம்.

ராமநாதபுரத்தில் ஜவாஹிருல்லா, ஆம்பூரில் அஸ்மல் பாஷா ஆகியோர் வெற்றி பெற்றனர். சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் தமிமுன் அன்சரி  8 அயிரம் வககு வித்தியாசத்தில் தோற்றார்.

ஜவாஹிருல்லா, ஆம்பூர் அஸ்லம் பாஷா  ஆகியோர் வெற்றி பெற்றனர். 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணியில் கலைஞர் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட மமகவுக்கு அனுமதியளித்தார்.

2016 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கப்பட்டது. அதனால், திமுக கூட்டணியில் மமகவுக்கு கப் அண்ட் சாசர் சின்னம் ஒதுக்கப்பட்டது. அப்போது  உளுந்தூர்பேட்டை, ராமநாதபுரம், ஆம்பூர், நாகப்பட்டினம், தொண்டாமுத்தூர் ஆகிய 5  தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட வாய்ப்பு வழங்கினார் திமுக தலைவராக இருந்த கலைஞர்.  ஆனால் உளுந்தூர் பேட்டையை வேண்டாம் என திரும்ப திமுகவிடமே கொடுத்துவிட்டது மமக. மமக தனி சின்னத்தில் போட்டியிடவும் ஜெயலலிதா போலவே கலைஞரும் சம்மதித்தார் இதன் காரணமாக கப் அண்ட் சாசர் சின்னத்தில் மமக தேர்தலில் களம் கண்டது.

இப்படி மமக தனிச் சின்னத்தில் களம் கண்டது ஜெயலலிதா, கலைஞரோடு முடிந்துவிட்டது.

திமுக கூட்டணியில் 2014 முதலே தொடர்ந்தாலும், 2021 தேர்தலில் தனி சின்னத்தில் நிற்க மமகவுக்கு வாய்ப்பை மறுத்தார் ஸ்டாலின்.

ஸ்டாலின் தலைமை ஏற்றதில் இருந்து மமகவுக்கு தனிச் சின்னம் மறுக்கப்பட்டது. உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வற்புறுத்தப்பட்டோம்.

மமகவின் பல நிர்வாகக் கூட்டங்களில் கூட, ‘முஸ்லிம் லீம் ஏணி சின்னத்தில் நிற்பதைப் போல நாம் நமது தனி சின்னத்தில் நிற்க வேண்டும். ஜெயலலிதா, கலைஞர் ஆகியோர் வழங்கியது போல ஸ்டாலினிடமும் நாம் கேட்டுப் பெற வேண்டும் என்று நிர்வாகிகள் பலர் வற்புறுத்தினார்கள்.

ஆனால் திமுகவோ உதயசூரியன் சின்னத்தில்தான் நிற்கவேண்டும், அதுவும் நாங்கள் சொல்லும் தொகுதியில்தான் நிற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது.

அதனால்.தான் 2016 க்குப் பிறகு மமக தனி சின்னத்தில் போட்டியிட முடியாமல் போய்விட்டது. அதனால்தான் பதிவையே ரத்து செய்யலாமா என்று தேர்தல் ஆணையம் இப்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2021 இல் தனி சின்னத்தில் போட்டியிட எங்களை ஸ்டாலின் சம்மதித்திருந்தால் இந்நிலை இப்போது ஏற்பட்டிருக்காது” என்கிறார்கள் கவலையோடு.,

மேலும் இதைக் காட்டியே 2026 சட்டமன்றத் தேர்தலில் தனி சின்னத்தில் நிற்கவும் வாய்ப்பு உருவாகியுள்ளது என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.