
பள்ளிகள் திறப்பு குறித்து வரும் 20 தேதி அறிவிப்பு வெளியாகும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலை காரணமாக கடந்த ஓராண்டிற்கும் மேலாக ஆன்லைன் மூலமாக மட்டுமே கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தற்போது தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் குறைந்து வருவதை அடுத்து, தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன் படி கடந்த முறை தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பின் படி, செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் பள்ளிகளை திறப்பதற்கு தயாராகி வரும் நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா கோரதாண்டவத்தை ஆரம்பித்துள்ளது. எனவே தமிழக அரசு அறிவித்த படி, 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து செயளாலர் காகர்லா உஷா, ஆணையர் நந்த குமார் மற்றும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோருடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அமைச்சர் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய பிறகு, வரும் 20ம்தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
