• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சென்னை சிக்னலில் மெல்லிசை… வாகன ஓட்டிகளுக்கு சர்ப்ரைஸ்…

Byகாயத்ரி

May 30, 2022

சென்னை சிக்னலில் வாகன ஓட்டிகளின் மன அழுத்தத்தை போக்குவதற்காக காவல்துறையின் சார்பில் மெல்லிசை ஒலிபரப்பப்படுகிறது.

டெல்லிக்கு அடுத்ததாக சென்னையில் அதிக அளவு வாகனங்கள் உள்ளது. இன்றைய நிலவரப்படி சுமார் 60 லட்சம் வாகனங்கள் சென்னையில் உள்ளன. இதில் 85 சதவீதம் இருசக்கர வாகனங்கள். கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் வாகனங்களின் எண்ணிக்கை 300 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் சென்னையில் 10 சதவீதம் வரை வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதனால் தினமும் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு முக்கியமான சாலை சந்திப்புகளில் நெரிசல் மிக்க பகுதிகளில் போக்குவரத்து சிக்னல்கள் இயக்கப்படுகிறது. தற்போது சென்னையில் 312 சிக்னல்கள் உள்ளன. இதில் 100 சிக்னல்கள் அண்ணா சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராஜாஜி சாலை, எல்பி சாலை, ராஜீவ்காந்தி சாலை, காமராஜர் சாலை, உஸ்மான் சாலை, ஜிஎஸ்டி சாலை என முக்கிய சந்திப்புகளில் சிக்னல்கள் உள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிக்க சிக்னல்களில் வாகனங்களில் காத்திருப்பது என்பது மிகவும் வேதனையாக இருக்கும். எனவே சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளின் மன அழுத்தத்தை குறைக்க காவல் துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி சிக்னல்களில் தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர்களின் பாடல்களை ஒலிபரப்ப முடிவு செய்துள்ளது. சோதனை முறையில் தற்போது ரிப்பன் மாளிகை எதிரே உள்ள சிக்னலில் மெல்லிசை பாடல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதற்கு வாகன ஓட்டிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதற்கட்டமாக 42 சந்திப்புகளில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.