திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் சார்பில் சாலைப் பாதுகாப்பு விதிகளை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் நோக்கில், இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா பகுதியில் தொடங்கிய இந்தப் பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
40-க்கும் மேற்பட்ட காவலர்கள் தலைக்கவசம் அணிந்து அணிவகுத்துச் செல்ல இப்பேரணி புறப்பட்டது. இந்நிகழ்வின்போது, தலைக்கவசம் அணிந்து சாலை விதிகளை மதித்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.

அதே வேளையில், தலைக்கவசம் அணியாமல் கவனக்குறைவாக வந்த வாகன ஓட்டிகளை எச்சரித்ததோடு நில்லாமல், அவர்களில் 50 பேருக்கு காவல்துறை சார்பில் உடனடியாகப் புதிய ஹெல்மெட்டுகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திண்டுக்கல்லில் தொடங்கிய இந்த விழிப்புணர்வுப் பேரணி ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், சத்திரம் மற்றும் ஆயக்குடி வழியாகச் சென்று பழனி மயில் ரவுண்டானா பகுதியில் நிறைவடைந்தது.
பேரணி சென்ற வழிநெடுகிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

‘வேகம் விபத்தின் ஆரம்பம்’, ‘தலைக்கவசம் உயிர் கவசம்’, ‘மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது’ உள்ளிட்ட சாலைப் பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் காவலர்கள் பொதுமக்களுக்குத் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் சமூக ஆர்வலர் ஜெயக்குமார் ஆகிய இரண்டு ஜெயக்குமார்கள் இணைந்து உயிரின் முக்கியத்துவம் குறித்து இந்த பேரணியானது இருசக்கர வாகன ஓட்டிகள் இடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி இரண்டு ஜெயக்குமார் அவர்களுக்கும் பெரும் பாராட்டுக்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் குவிந்து வருகிறது.



