ஆப்கானிஸ்தான் ஓட்டல்களில் ஆண் பெண் சேர்ந்து அமர்ந்து சாப்பிட தாலிபான்கள் தடை விதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. ஆப்கன் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து அந்நாட்டில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதிப்பதில் தாலிபான்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் அதிக அளவில் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தான் ஆப்கன் ஓட்டல்களில் ஆண் பெண் சேர்ந்து சாப்பிட தாலிபான்கள் தடை விதித்து இருப்பதாக பகீர் தகவல் ஒன்று வெளியாகி வந்தது. திருமணம் ஆகி கணவன் மனைவியாக இருந்தாலும் ஓட்டல்களில் சேர்ந்து அமர்ந்து உணவு சாப்பிடக் கூடாது என தாலிபான்கள் உத்தரவிட்டு இருப்பதாக கூறப்பட்டன, ஆப்கன் நாட்டின் மேற்கு பகுதியில் ஹெராத் மாகாணம் உள்ளது. இந்த பகுதியில் இந்த நடைமுறை அமலுக்கு வந்து இருப்பதாகவும் கூறப்பட்டது. அதில் கணவன் மனைவி என எந்த உறவினராக இருந்தாலும், ஆண்கள் பெண்கள் தனித்தனியே தான் அமர்ந்து கொண்டு சாப்பிட வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதை அடுத்து தாலிபான்களின் புது உத்தரவுக்கு கடும் கண்டனம் மற்றும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில், இணையத்தில் வெளியான தகவல்களுக்கு தாலிபான்கள் விளக்கம் அளித்து இருக்கிறது. அதன்படி, “சில ஊடக நிறுவனங்கள் குடும்பத்தார் அவர்களின் பெண் உறுப்பினர்களுடன் சேர்ந்து ரெஸ்டாரண்ட் மற்றும் ஓட்டல்களில் உணவு சாப்பிட அமைச்சகம் தடை விதித்து இருப்பதாக செய்தி வெளியிட்டு வருகின்றன. இவை முழுக்க முழுக்க வதந்திகள், இவற்றில் துளியும் உண்மை இல்லை, இவை ஆதாரமற்ற பொய் பிரச்சாரம்,” என தாலிபான் அமைச்சரவையை சேர்ந்த சூஹெயில் ஷாஹீன் தெரிவித்து இருக்கிறார்.
சமீபத்தில் பூங்காக்களில் ஆண்கள், பெண்கள் சேர்ந்து செல்ல தடை விதித்து தாலிபான்கள் உத்தரவு பிறப்பித்து இருந்தனர். இந்த உத்தரவின் படி ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியே தான் பூங்காக்களுக்கு செல்ல முடியும். இதற்காக வியாழன், வெள்ளை, சனி ஆகிய நாட்களில் பெண்களும், திங்கள், செவ்வாய், புதன், ஞாயிறு ஆகிய நாட்களில் ஆண்களும் பூங்காக்களுக்கு செல்ல முடியும். இந்த உத்தரவுக்கும் கடும் கண்டனங்கள் மற்றும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.