

மதுரை கோ.புதூர் லூர்து அன்னை திருத்தலத்தின் 104 -ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை வடக்கு மறைவட்ட அதிபர் அருளானந்தம் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். பின்னர், ‘லூர்து அன்னையின் பாதையில் நம் பயணம்’ என்ற தலைப்பில் மறையுறை ஆற்றினார். பங்குத்தந்தை ஜார்ஜ், உதவி பங்கு தந்தைகள் பாக்கியராஜ், யூஜின், ஜஸ்டின், இம்மானுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 11-ந்தேதி வரை நடைபெறும் விழாவில், தினசரி காலை மற்றும் மாலை பல்வேறு தலைப்புகளில் ஜெபமாலை திருப்பலிகள் நடக்கிறது. இதில் அனைத்து பங்குகளில் உள்ள கல்வி நிறுவனங்கள், பங்கு மக்கள் திருயாத்திரையாக நடந்து வந்து பங்கு கொள்கிறார்கள்.
குறிப்பாக, திருவிழாவின் 8-ம்நாள் அன்று நற்கருணை பவனி, தந்தை மரிய டெல்லஸ் தலைமையில் நடைபெறுகிறது. இது போல் 10-ந்தேதி( சனிக்கிழமை) காலையில் 100-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கு புது நன்மை வழங்கும் திருப்பலி நடைபெறுகிறது. அன்று மாலையில் மாதாவின் ஆடம்பர தேர் பவனி, சிவகங்கை மறை மாவட்ட ஆயர் லூர்து ஆனந்தம் தலைமையில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஆடம்பர திருப்பலியும் நடைபெறுகிறது. திருவிழாவின் கடைசி நாளன்று, பொங்கல் விழா நடைபெறுகிறது. அன்றைய தினமும் சிறப்பு திருப்பலிகள் நடக்கிறது. இந்த பெருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

