

மதுரை மத்திய சிறையில் இன்று இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு மதுரை சரக சிறைத்துறை டிஐஜி பழனி தேசிய கொடியேற்றினார். அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறைவாசிகளுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
அதன் தொடர்ச்சியாக மதுரை மத்திய சிறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் வாசகர் வட்ட சிறைவாசிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த வாசகர் வட்டம் சிறைவாசிகளுக்கு நூல்களை படிப்பதற்கான ஆர்வத்தை தூண்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும்.
சிறைவாசிகள் தான் படித்த நூல்களைப் பற்றி மற்ற சிறைவாசிகளுக்கு கதை வடிவில் கூறி அவர்களுக்கும் அந்த நூல்களை படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் வகையில் செயல்பட்ட சிறைவாசிகளை பாராட்டும் வகையில் அவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
மேலும் மதுரை மத்திய சிறையில் விழிப்புடன் மற்றும் சிறப்பாக செயல்பட்ட 50 சிறை பணியாளர்களுக்கு பாராட்டும் பரிசு கேடயமும் வழங்கப்பட்டது.
மதுரை மத்திய சிறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் இசைக் குழுவிற்கு வைகை சுதந்திரப் பறவைகள் இசைக் குழு என இன்று பெயர் சூட்டப்பட்டது. இக்குழுவினரின் இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது. இக்குழுவினருக்கு புதிய வெள்ளை நிற சீருடை பெல்ட் சூ ஆகியவை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக நகைச்சுவை நடிகர் மதுரை முத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறைவாசிகளின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சியில் பங்கேற்று ஜோக்குகள் கூறி சிறைக்கைதிகளை மகிழ்வித்தார்.
இந்நிகழ்ச்சி மதுரை மற்றும் பாளையங்கோட்டை கட்டுப்பாட்டு சிறைகளில் உள்ள அனைத்து சிறைவாசிகளும் கண்டுகளிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை சிறை துறையினர் செய்திருந்தனர்.
