• Wed. Jul 8th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி ஆகஸ்டில் திறப்பு? – 90% நிறைவடைந்த கட்டுமானப் பணிகள் தீவிரம்

ByKalamegam Viswanathan

Jul 8, 2026

மதுரை மாவட்டம் தோப்பூரில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் வகுப்பறைகள், ஆய்வகங்கள், விடுதிகள் உள்ளிட்ட முதற்கட்ட கட்டடப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மருத்துவக் கல்லூரி வளாகம் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இரவு, பகலாக கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மதுரை தோப்பூரை அடுத்த கோ. புதுப்பட்டியில் 220 ஏக்கர் பரப்பளவில், ரூ.2,021.51 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மற்றும் விடுதிக் கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஜப்பான் நாட்டின் ஜைக்கா (JICA) நிறுவனத்தின் நிதியுதவியுடன் கடந்த 2024-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

மொத்த திட்டப் பணிகளையும் 33 மாதங்களுக்குள், அதாவது 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மருத்துவக் கல்லூரி, மாணவர் விடுதிகள், ஆய்வகங்கள் மற்றும் வெளிநோயாளிகள் பிரிவு (OPD) கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இரண்டாம் கட்டமாக உள்நோயாளிகள் சிகிச்சைக்கான முதன்மை மருத்துவமனைக் கட்டடங்கள் கட்டப்படவுள்ளன.

மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, விடுதிகள், குடியிருப்புகள், கூட்ட அரங்கம் உள்ளிட்ட மொத்தம் 24 கட்டடங்கள் இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன. உலகத் தரநிலைகளுக்கு ஏற்ப நவீன மருத்துவ வசதிகளுடன், நீடித்த நிலைத்தன்மையை கருத்தில் கொண்டு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் மொத்தம் 900 படுக்கை வசதிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் தொற்றுநோய் சிகிச்சைக்காக மட்டும் 150 படுக்கைகள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், 750 இருக்கைகள் கொண்ட நவீன கூட்ட அரங்கம், விளையாட்டுத் திடல், மாணவர் விடுதிகள் மற்றும் குடியிருப்புகள் ஆகியவற்றின் பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளன.

தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, நான்காம் ஆண்டு மாணவர்கள் தோப்பூரில் கட்டி முடிக்கப்பட்ட விடுதியில் தங்க வைக்கப்பட்டு, மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் மருத்துவப் பயிற்சி பெற்று வருகின்றனர்.

மாணவர்களின் தற்போதைய விடுமுறை முடிந்த பிறகு, அவர்கள் நேரடியாக மதுரை தோப்பூரில் அமைந்துள்ள புதிய எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பயிலும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கல்லூரி மற்றும் விடுதிக் கட்டடப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து, ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் மருத்துவக் கல்லூரி வகுப்புகள் புதிய வளாகத்தில் முழுமையாகத் தொடங்கப்படும் என்றும், ஆகஸ்ட் மாதத்திலேயே எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி வளாகம் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.