• Sun. Nov 15th, 2026

நகைக்கடைக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்த காதலன் தலைமறைவு..,

ByKalamegam Viswanathan

Nov 15, 2026

ஹாலிவுட் பட ஸ்டைலில் பிளான் போட்டு, தனது பைக்கைக் கொடுத்து கொள்ளைக்குத் திட்டமிட்ட காதலி – தலைமறைவான காதலனைத் தேடும் காவல்துறையினர்!

பல கோடி மதிப்பில் சிக்கிய கொள்ளையனை மாற்றிய காட்டிய ‘டாட்டூ’!
மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் நேதாஜி மெயின் ரோடு பகுதியில் அமைந்துள்ள தனிஷ்க் (Tanishq) ஜுவல்லரி கடந்த மாதம் 15 ஆம் தேதி திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கடந்த 12 ஆம் தேதி ஊழியர்கள் கடையைத் திறந்தபோது, கடைக்குள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நகைகள் சிதறிய நிலையில் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக மேலாளருக்குத் தகவல் தெரிவித்ததோடு, காவல்துறையினருக்கும் புகார் அளித்தனர்.

சிசிடிவி காட்சியும், சிக்கிய ‘டாட்டூ’ தடயமும்:
சம்பவ இடத்திற்கு விரைந்த எஸ்.எஸ். காலனி காவல்துறையினர், தடயவியல் நிபுணர்கள் மூலமாக தடயங்களைச் சேகரிக்கத் தொடங்கினர்.
தொடர்ந்து, கடைக்குள் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, கடந்த 1 ஆம் தேதி கையில் கட்டுடன் வந்த ஒரு இளைஞரையும், 2 ஆம் தேதி தொப்பி அணிந்தவாறு இயல்பாக வந்த இளைஞரையும் காவல்துறையினர் ஒப்பிட்டுப் பார்த்தனர். அந்தக் காட்சிகளுடன், 12 ஆம் தேதி முகமூடியுடன் கொள்ளையில் ஈடுபட்ட நபரின் அடையாளங்களை ஒப்பிட்டபோது, இரு வீடியோக்களிலும் சம்பந்தப்பட்ட நபரின் கையில் இருக்கும் டாட்டூ (Tattoo) ஒன்றாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், நகைக்கடையை ஒட்டிய நேதாஜி மெயின் ரோடு பகுதி சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது, முகமூடி, ஹெல்மெட் மற்றும் கையுறை அணிந்தவாறு இளைஞர் ஒருவர் பைக்கில் அதிவேகமாகப் பையுடன் சென்றது தெரியవந்தது.
இதன் அடிப்படையில், மதுரை பழங்காநத்தம் அருட்பெருஞ்ஜோதி தெருவைச் சேர்ந்த நிஷாந்த் என்ற இளைஞர்தான் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியானது.

ஹாலிவுட் ‘Money Heist’ ஸ்டைல் திட்டம்:
விசாரணையில், கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய நிஷாந்த், யூடியூப் சேனல்களுக்கு வீடியோ எடிட்டிங் பணியை அவ்வப்போது செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், கேரளா, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நண்பர்களுடன் ஜாலி ரெய்டு செல்வது, சுற்றுலா தளங்களுக்குச் சுற்றுவது என ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளார்.
அப்போது, தனது கல்லூரி கால தோழியும், பிரபல இன்ஸ்டா இன்புளூயன்சருமான மீனாட்சி என்பவரைக் காதலித்துள்ளார். தற்போது மீனாட்சி புதிய வீடு கட்டிவரும் நிலையில், வீடு கட்டுவதற்கு அதிக அளவில் பணம் தேவைப்படுவதாகவும், பல்வேறு கடன்கள் இருப்பதாகவும் கூறி காதலன் நிஷாந்திடம் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

இதைக் கண்டு கலங்கிய நிஷாந்த், ஹாலிவுட் படமான ‘Money Heist’ பட ஸ்டைலில் நகைக்கடையில் கொள்ளையடிப்பது குறித்த திட்டத்தைத் தீட்டியுள்ளார்.
கொள்ளை அரங்கேறிய விதம்:
திட்டமிட்டபடி கடந்த 5 ஆம் தேதியன்று, தனிஷ்க் நகைக்கடூவின் மேலே அமைக்கப்பட்டிருந்த இரும்புச் சாரம் (Scaffolding) மூலமாகச் சென்று, லிப்ட் அருகே உள்ள அவசரகால வழியின் இரும்பு வேலியை அகற்றிவிட்டு உள்ளே சென்று நோட்டமிட்டுள்ளார்.

பின்னர், கொள்ளைக்குத் தேவையான டூல்ஸ்களுடன், கடந்த 12 ஆம் தேதி நள்ளிரவு இரும்புச் சாரம் வழியாக மூன்றாவது தளத்திற்குச் சென்ற நிஷாந்த், லிப்ட் பணிகள் நடைபெற்று வருவதால் அதன் கயிறு மூலமாக ஒவ்வொரு தளமாக இறங்கி, தரைத்தளத்தில் உள்ள நகைக்கடைக்குள் நுழைந்துள்ளார்.
கடைக்குள் எந்தவித பதற்றமும் இன்றி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நகைகளை ஒவ்வொன்றாகப் பையில் பத்திரமாக வைத்துள்ளார். பின்னர் அதே வழியில் தப்பியுள்ளான். நள்ளிரவு 1 மணியளவில் நகைக்கடைக்குப் பின்னால் சென்றபோது நாய்கள் துரத்தியதால், முதற்கட்ட முயற்சியை விட்டுவிட்டு, மீண்டும் அந்தப் பகுதியைச் சுற்றி வந்து பைக்கை நிறுத்திவிட்டு இந்தத் துணிகரக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளான்.

கொள்ளையடித்த பிறகு தனது காதலியின் பைக்கைப் பயன்படுத்தி நேரு நகர், மாடக்குளம், பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிந்துள்ளான். பின்னர் அதிகாலை தனது தந்தை சுரேஷிடம் தன்னிடம் ஒரு பை இருப்பதாகக் கூறி வீட்டில் வைக்குமாறு கொடுத்துள்ளான்.

பதுக்கல் மற்றும் தப்பியோட்டம்:
மாடக்குளத்தில் நிஷாந்த்தின் குடும்பத்திற்குச் சொந்தமான வயல்வெளிக்கு ஆட்டோவில் சென்ற நிஷாந்த், வேவு பார்த்த மற்றும் கொள்ளையின்போது அணிந்திருந்த ஆடைகளைத் தீயிட்டு எரித்துவிட்டு, நகைகளைப் அந்தப் பகுதியில் பதுக்கி வைத்துள்ளான். பின்னர் பல்வேறு மாவட்டங்களுக்குத் தப்பியோடிவிட்டான்.
சிசிடிவி பதிவுகள் மற்றும் செல்போன் சிக்னல்கள் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். நிஷாந்த்தின் காதலி மீனாட்சியின் பைக் கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த நிஷாந்த்தை காவல்துறையினர் தேடிவரும் நிலையில், அவரது தந்தை சுரேஷ் மற்றும் காதலி மீனாட்சி ஆகியோரைக் கைது செய்தனர்.

மீட்கப்பட்ட 5 கிலோ தங்கம்:
கைது செய்யப்பட்ட மீனாட்சியை மாடக்குளம் பகுதியில் உள்ள வயல்வெளிக்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் சோதனை செய்தபோது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.
தனிஷ்க் நகைக்கடையில் சென்சார் உள்ள பகுதிகளையோ, தேவையற்ற நகைகளையோ தொடாமல், தடயங்கள் ஏதுமின்றி மிகத் துல்லியமாக நிஷாந்த் இந்த கொள்ளையை அரங்கேற்றியது காவல்துறையினரையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தற்போதைய நிலை: இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிஷாந்த்தின் தந்தை சுரேஷ் மற்றும் காதலி மீனாட்சி ஆகியோரை எஸ்.எஸ். காலனி காவல்துறையினர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்த பிறகு, நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள முக்கியக் குற்றவாளியான நிஷாந்த்தைத் தனிப்படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.