• Tue. Dec 10th, 2024

~உள்ளாட்சி-உரிமைக்குரல்| – பிரச்சாரத்தைத் தொடங்கும் நடிகர் கமலஹாசன்..!

Byகுமார்

Sep 27, 2021

தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9-ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, 23,998 பதவிகளுக்கு 79,433 பேர் போட்டியிடுகின்றனர்.அதில், 2,981 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இன்று முதல் வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க உள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளனர். மறுபுறம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் பறக்கும் படைகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இதில், கமல் ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து, தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, கமல்ஹாசன் இன்று (செப்டம்பர் 27) முதல் கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார்.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சி தேர்தல் களத்தில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும், உள்ளாட்சிகளின் உரிமைகளுக்காக உரத்த குரல் கொடுப்பதற்கும் கமல்ஹாசன் ~உள்ளாட்சி-உரிமைக்குரல்| முதல் கட்ட பிரசாரப் பயணத்தை 27- ஆம் தேதி காஞ்சீபுரம் மாவட்டம் கோவூரில் இருந்து தொடங்குகிறார். 30-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவர் பிரசாரத்தை தொடர்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

 

செய்தியாளர் :விஷா