சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில், இந்தியாவின் மிகப்பெரிய பிளவு மற்றும் மண்டையோட்டு முகப் பகுதி சிகிச்சை மையத்தின் தொடக்க விழாவை முன்னிட்டு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் உலகின் மிகப்பெரிய பிளவு சிகிச்சை தொண்டு நிறுவனமான ஸ்மைல் ட்ரெயின் அமைப்பின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சுசானா ஷேஃபர், ஆசிய பிராந்திய இயக்குநர் மம்தா கரோல், ரெலா மருத்துவமனை தலைவர் பேராசிரியர் முகமது ரெலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், இந்த ஊடக நிகழ்வில் உள்ளூர் செய்தியாளர்கள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாம்பரம் மாநகராட்சி மற்றும் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனையில் நடைபெறும் முக்கிய செய்தி நிகழ்வுகளுக்கு, அருகில் பணியாற்றும் செய்தியாளர்களுக்கு அழைப்பு வழங்கப்படவில்லை என பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மாறாக, பல்வேறு பகுதிகளில் இருந்து யூடியூப் சேனல்களைச் சேர்ந்த நபர்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட சில ஊடகப் பிரதிநிதிகள் மட்டுமே அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஊடக ஒருங்கிணைப்பாளர் மகேஷ் குமாரிடம் உள்ளூர் செய்தியாளர்கள் விளக்கம் கேட்டபோது, “தேர்வு செய்யப்பட்ட ஊடகத்தினருக்கு மட்டுமே அழைப்பு வழங்கப்பட்டுள்ளது” என பதிலளித்ததாக கூறப்படுகிறது.

இதனால், உள்ளூர் செய்தியாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் சார்ந்த முக்கிய மருத்துவ அறிவிப்புகள் மற்றும் சமூக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில், அனைத்து ஊடகங்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், குறிப்பாக அந்தப் பகுதியை தொடர்ந்து செய்தியாக்கி வரும் உள்ளூர் செய்தியாளர்களை புறக்கணிக்கக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த விவகாரம் தற்போது ஊடக வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், ரேலா மருத்துவமனை நிர்வாகம் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென செய்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








