• Thu. Apr 25th, 2024

இலக்கியம்

Byவிஷா

Apr 21, 2023

நற்றிணைப் பாடல் 164:

உறை துறந்திருந்த புறவில் தனாது
செங் கதிர்ச் செல்வன் தெறுதலின் மண் பக
உலகு மிக வருந்தி உயாவுறு காலைச்
சென்றனர் ஆயினும் நன்று செய்தனர் எனச்
சொல்லின் தெளிப்பவும் தெளிதல் செல்லாய்
செங்கோல் வாளிக் கொடு வில் ஆடவர்
வம்ப மாக்கள் உயிர்த் திறம் பெயர்த்தென
வெங் கடற்று அடை முதல் படு முடை தழீஇ
உறு பசிக் குறு நரி குறுகல் செல்லாது
மாறு புறக்கொடுக்கும் அத்தம்
ஊறு இலர் ஆகுதல் உள்ளாமாறே

பாடியவர்: ஆசிரியர் பெயர் இடம்பெறவில்லை
திணை: பாலை

பொருள்:

 மழை இல்லாமல் இருக்கும் முல்லை நிலம். அதில் காலையில் தோன்றும் செங்கதிரே சுட்டெரிக்கும் காலம். உலகமே வருந்திப் பெருமூச்சு  விட்டுக்கொண்டிருந்தது. அந்தக் காலத்தில் அவர் சென்றார். அப்படிச் சென்றாலும் இப்போது நல்லது செய்திருக்கிறார் (திரும்பி வந்திருக்கிறார்) என்று பலரும் சொல்லித் தெளிவுபடுத்துகின்றனர். அவர்கள் தெளிவுபடுத்தியும் நீ நம்ப மறுக்கிறாய். (தெளிதல்-செல்லாய்) வளையாத அம்பு, வளைந்த வில் ஆகியவற்றைக் கொண்ட ஆடவர். புதிதாக வழியில் வருபவர்களின் உயிரைப் பறிப்பர். அவர்களது உடல் காட்டு இலைகளுக்கு இடையே முடை நாற்றம் வீசிக்கொண்டு கிடக்கும். பசியோடு இருக்கும் குறு நரி அதனைக் கண்டு அஞ்சி அதன் பக்கமே செல்லாமல் பார்த்ததும் திரும்பி ஓடிவிடும். அந்த வழியில் சென்றவர் எத்தகைய துன்பமும் இல்லாமல் திரும்பியுள்ளார். நீதான் நம்ப மறுக்கிறாய். தோழி தலைவிக்குச் சொல்கிறாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *