• Thu. Apr 25th, 2024

இலக்கியம்

Byவிஷா

Apr 19, 2023

நற்றிணைப் பாடல் 162:

மனை உறை புறவின் செங் காற் பேடைக்
காமர் துணையடு சேவல் சேர
புலம்பின்று எழுதரு புன்கண் மாலைத்
தனியே இருத்தல் ஆற்றேன் என்று நின்
பனி வார் உண்கண் பைதல கலுழ
நும்மொடு வருவல் என்றி எம்மொடு
பெரும் பெயர்த் தந்தை நீடு புகழ் நெடு நகர்
யாயடு நனி மிக மடவை முனாஅது
வேனில் இற்றித் தோயா நெடு வீழ்
வழி நார் ஊசலின் கோடை தூக்குதொறும்
துஞ்சு பிடி வருடும் அத்தம்
வல்லை ஆகுதல் ஒல்லுமோ நினக்கே

பாடியவர்: ஆசிரியர் பெயர் இடம் பெறவில்லை
திணை: பாலை

பொருள்:

 வீட்டில் வாழும் புறா, சிவந்த கால்களை கால்களை உடைய பெண்புறா தான் விரும்பும் சேவல்-புறாவின் அடுத்துத் துணையாகச் சேர்ந்து நிற்கும். அந்த மாலை நேரத்தில் நான் தனியே இருக்க இயலாமல் கண்ணில் நீர் மல்கத் துன்புறுவேன். எனவே உன்னுடன் நானும் வருகிறேன், என்கிறாய். புகழில் மேம்பட்டிருக்கும் உன் தந்தை மாளிகையில் (நெடுநகர்) இருப்பதற்கே இப்படி வருந்துகிறாய். நீ ஒரு அறியாப் பெண். (மடவை) நான் செல்லும் வழியில் இற்றி மரம் இருக்கும். கோடைக்காற்று (மேலைக் காற்று) வேனில் காலத்தில் வீசும்போது நிலத்தில் ஊன்றாத இற்றி மரத்து விழுது ஆடும். அந்த மரத்தடியில் உறங்கும் யானையை அந்த விழுது தடவிக் கொடுக்கும். அந்த வழியில் உன்னால் வர இயலுமா? இயலாது. இங்கேயே இரு என்று தலைவன் தலைவியிடம் கூறுகிறான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *