நற்றிணைப் பாடல் 158:
மணி துணிந்தன்ன மா இரும் பரப்பின்
உரவுத் திரை கொழீஇய பூ மலி பெருந் துறை
நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல் இடிகரை
கோடு துணர்ந்தன்ன குருகு ஒழுக்கு எண்ணி
எல்லை கழிப்பினம்ஆயின் மெல்ல
வளி சீத்து வரித்த புன்னை முன்றில்
கொழு மீன் ஆர்கைச் செழு நகர்ச் செலீஇய
எழு எனின் அவளும் ஒல்லாள் யாமும்
ஒழி என அல்லம் ஆயினம் யாமத்து
உடைதிரை ஒலியின் துஞ்சும் மலி கடற்
சில் குடிப் பாக்கம் கல்லென
அல்குவதாக நீ அமர்ந்த தேரே
பாடியவர்: கண்ணம் புல்லனார்
திணை: நெய்தல்
பொருள்:
நீல மணியை நெரித்து வைத்தது போன்று அலை மோதும் கடல் துறை. அங்கே நிலா வெளிச்சத்தைக் குவித்து வைத்தது போன்ற மணல் குவியல். துறைக் கரையில் அமர்ந்துகொண்டு அங்குப் பறக்கும் குருகுப் பறவைகளை ஒன்று இரண்டு என்று எண்ணிப் பார்த்துக்கொண்டு பகல் பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தோம். வீட்டு முற்றத்தில் புன்னை மரம். காற்றில் உதிர்ந்த புன்னைப் பூக்கள் முற்றத்தில் கொட்டிக் கிடக்கும்.. வீட்டுக்குச் சென்றால் மீன் உணவு. உண்ணச் செல்லலாம் என்றால் வேண்டாம் என்று துறையிலேயே இருக்கிறோம். இரவில் ஊரே உறங்கும். அலை மோதும் ஒலியைக் கேட்டுக்கொண்டே உறங்கும். நீ தேரில் வந்துள்ளாய். உன் தேர் எங்கள் ஊரில் (சிறுகுடிப் பாக்கம்) தங்கட்டுமே. – தோழி தலைவிக்காக இதனைத் தெரிவிக்கிறாள்.