• Sat. Apr 1st, 2023

இலக்கியம்

Byவிஷா

Mar 7, 2023

நற்றிணைப் பாடல் 130:

வடு இன்று நிறைந்த மான் தேர்த்தெண் கண்
மடிவாய்த் தண்ணுமை நடுவண் ஆர்ப்ப
கோலின் எறிந்து காலைத் தோன்றிய
செந் நீர்ப் பொது வினைச் செம்மல் மூதூர்த்
தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோ
எனை விருப்புடையர் ஆயினும் நினைவிலர்
நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும்
வாடிய வரியும் நோக்கி நீடாது
எவன் செய்தனள் இப் பேர் அஞர் உறுவி என்று
ஒரு நாள் கூறின்றும் இலரே விரிநீர்
வையக வரையளவு இறந்த
எவ்வ நோய் பிறிது உயவுத் துணை இன்றே

பாடியவர்: நெய்தல் தத்தனார்
திணை: நெய்தல்

பொருள்:
என் கண்ணுக்குத் தெரிகிறது. குற்றமின்றி நிறைந்திருக்கும் கண்ணுக்குத் தெரிகிறது. மான் போல் மருண்டு பார்க்கும் கண்ணுக்குத் தெரிகிறது. தெளிவு பெற்றிருக்கும் கண்ணுக்குத் தெரிகிறது. என்ன தெரிகிறது? ஊருக்கு நடுவில் மடித்த வாயுடன் கூடிய தண்ணுமை மேளத்தைக் கோலால் அடிக்கும் முழக்கம் கேட்கிறது. ஆற்றில் வெள்ளம் (செந்நீர்). அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஊரே கூடிச் செய்யும் பொதுப்பணி (பொதுவினை). செம்மாப்புடன் ஊரே கூடிச் செய்யும் பொதுப்பணியில் தமது பங்களிப்பு இருப்பதைக் காட்டிலும் இனியது ஒன்று இருக்கமுடியுமா? அவர் என்னை விரும்புபவர்தான். என்னை மணந்துகொண்டு தம் குடும்பத்தின் பங்களிப்பைத் தரவேண்டுமே என்னும் நினைவே இல்லாதவராக இருக்கிறாரே! அவருக்கு என் செஞ்சைக் கொடுத்துவிட்டேன். என் தோள் மெலிகிறது. அல்குல் வரிக்கோடுகள் வாடுகின்றன. நிலையிழந்து நிற்கும் என் தோளையும், வரியையும் பார்த்து, காலம் தாழ்த்தாமல் “என்ன ஆயிற்று, பெரிதும் துன்பப்படுகிறாளே” என்று ஒருநாள் கூடக் கேட்கவில்லையே!
விரிந்த நீருக்கிடையில் இருக்கும் இந்த நிலவுலகத்தையும் கடந்து நிற்கும் என் துன்ப நோயைப் பற்றிக் கேட்டறியும் துணை எனக்கு இல்லையே. – தலைவி இப்படிச் சொல்லிக்கொண்டு தவிக்கிறாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *