• Tue. Mar 21st, 2023

இலக்கியம்:

Byவிஷா

Mar 8, 2023

நற்றிணைப் பாடல் 131:

ஆடிய தொழிலும் அல்கிய பொழிலும்
உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு
ஊடலும் உடையமோ உயர் மணற் சேர்ப்ப
திரை முதிர் அரைய தடந் தாள் தாழைச்
சுறவு மருப்பு அன்ன முட் தோடு ஒசிய
இறவு ஆர் இனக் குருகு இறைகொள இருக்கும்
நறவு மகிழ் இருக்கை நல் தேர்ப் பெரியன்
கள் கமழ் பொறையாறு அன்ன என்
நல் தோள் நெகிழ மறத்தல் நுமக்கே

பாடியவர்: உலோச்சனார்
திணை: நெய்தல்

பாடலின் பொருள்:

சேர்ப்பனே ! என் தோளைத் தழுவி நெகிழவைத்திருக்கிறாயே. உன்னோடு ஊடல் கொள்ள முடியுமா? – தலைவி கூறுகிறாள்.
மணல்நிலத் தலைவனாகிய சேர்ப்பனே! நீ என்னோடு எப்படி எப்படி எல்லாம் விளையாடினாய். அந்த விளையாட்டையும், விளையாடிய மரச் சோலையையும் நீ இல்லாதபோது எண்ணிப்போர்த்து நினைக்க முடியாத துன்பத்துடன் நெஞ்சம் வருந்தினேன். இப்போது நீ மணந்துகொண்டாய். என் தோளைத் தழுவி நெகிழ வைத்திருக்கிறாய். இந்த நிலையில் ’அன்று பல நாள் வரவில்லையே’ என்று பிணக்குப் போட்டுக்கொள்ள முடியுமா?  உனக்கு என் தோள் அரசன் பெரியன் ஆளும் பொறையாறு போல இன்பம் தருவது ஆயிற்றே.

பொறையாறு – திரையலை மோதும் அடிமரம் கொண்ட தாழை மரத்தின் முள்ளை உடைய மடல் வளைய வளைய, இறா மீன் இரையை உண்ட குருகுப் பறவை அமர்ந்திருக்கும் பொறையாறு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *