


நற்றிணைப் பாடல் 126:
பைங் காய் நல் இடம் ஒரீஇய செங்காய்க்
கருங் களி ஈந்தின் வெண் புறக் களரி
இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல்
ஆள் பெறல் நசைஇ நாள் சுரம் விலங்கி
துனைதரும் வம்பலர்க் காணாது அச் சினம்
பனைக் கான்று ஆறும் பாழ் நாட்டு அத்தம்
இறந்து செய் பொருளும் இன்பம் தரும் எனின்
இளமையின் சிறந்த வளமையும் இல்லை
இளமை கழிந்த பின்றை வளமை
காமம் தருதலும் இன்றே அதனால்
நில்லாப் பொருட் பிணிச் சேறி
வல்லே நெஞ்சம் வாய்க்க நின் வினையே

பாடியவர்: பெயர் தெரியவில்லை
திணை: பாலை
பொருள்:
தலைவியைப் பிரிந்து சென்று பொருள் ஈட்டிவர எண்ணும் தன் நெஞ்சோடு தலைவன் பேசுகிறான். பசுமை காய்த்திருக்கும் நல்ல இடத்தை விட்டுவிட்டுச் செல்கிறாய். அங்கே ஆண்யானை களரி நிலத்துப் புழுதியை நீர் என அள்ளித் தன்மேல் தெளித்துக் குளித்துக்கொண்டிருக்கும். அந்தக் களரி நிலத்தில் ஈந்தின் செங்காய் கருமைநிறம் கொண்டு பழுக்காமல் இருக்கும். அக் காட்டில் விரைவாக நடமாடும் (துனைதரும்) புதியவர்களைக் கூட (வம்பலர்) காணமுடியாது. பனை மரங்கள் சினம் கொண்டு தலையை விரித்துக்கொண்டிருக்கும். அந்த வழியில் சென்று நீ தேடும் பொருளானது இன்பம் தரும் எனில் செல். இளமையைக் காட்டிலும் சிறந்த பொருள் (வளம்) இல்லை. இளமை கழிந்த பின்னர் நீ தேடிய பொருள் காம இன்பம் தரப்போவதும் இல்லை. அதனால், நெஞ்சே, நிலையில்லாத பொருளைத் தேடும் உன் ஆள்வினை (முயற்சி) உனக்கு வாய்க்கப் பெறட்டும்.

