• Sat. Apr 27th, 2024

இலக்கியம்

Byவிஷா

Feb 8, 2023

நற்றிணைப் பாடல் 111:

அத்த இருப்பைப் பூவின் அன்ன
துய்த் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர்
வரி வலைப் பரதவர் கரு வினைச் சிறாஅர்
மரல் மேற்கொண்டு மான் கணம் தகைமார்
வெந் திறல் இளையவர் வேட்டு எழுந்தாங்கு
திமில் மேற்கொண்டு திரைச் சுரம் நீந்தி
வாள் வாய்ச் சுறவொடு வய மீன் கெண்டி
நிணம் பெய் தோணியர் இகு மணல் இழிதரும்
பெருங் கழிப் பாக்கம் கல்லென
வருமே தோழி கொண்கன் தேரே

பாடியவர்: பெயர் இடம்பெறவில்லை
திணை: நெய்தல்

பொருள்:
கொண்கன் (மணந்து கொள்ளப் போகிறவன்) தேர் வருகிறது என்று தோழி தலைவிக்குத் தெரிவிக்கிறாள்.
வழியில் கிடக்கும் இரும்பைப் பூவைப் போல வெண்மையான தலை கொண்ட இறா மீனையும், அதனோடு சேர்ந்து மேயும் பிற மீன்வகைகளையும் பிடிப்பதற்காகக் கடலில் வலை விரித்துப் பரதவர் வலிமை மிக்க தொழிலை மேற்கொள்வர். அவர்களுடைய சிறுவர்கள் பேய்த்தேர் வெயிலை நீர் என்று நம்பி ஓடும் மானைப் பிடிப்பதற்காக ஓடுவர். இந்தச் சிறுவர்களைப் போல, அவர்களின் தந்தைமார் திமிலில் ஏறிக் கடல்-திரைக் காட்டில் நீந்திச் செல்வர். வாள் போன்ற வாயை உடைய சுறா மீனுடன் பெரிய பெரிய மீன்களையும் பிடித்துத் தோணியில் ஏற்றிக்கொண்டுவருவர். பெரிய உப்பங்கழிகள் இருக்கும் மணலுக்கு வருவர். அவர்கள் வரும் மணல்வெளியில் கொண்கன் தேர் வருகிறதே! தோழி என்ன செய்யலாம், என்று கவலையுடன் தோழி தலைவிக்குத் தெரிவிக்கிளாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *