நற்றிணைப் பாடல் 110:
பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால்
விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்தி
புடைப்பின் சுற்றும் பூந் தலைச் சிறு கோல்
உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர்
முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று
அரி நரைக் கூந்தற் செம் முது செவிலியர்
பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்கொல்
கொண்ட கொழுநன் குடி வறன் உற்றென
கொடுத்த தந்தை கொழுஞ் சோறு உள்ளாள்
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே
பாடியவர்: போதனார்
திணை: பாலை
பொருள்:
கணவன் குடும்பத்துக்குப் பெருமை சேர்க்கும் அறிவும் ஒழுக்கமும் தன்மகள் எங்குக் கற்றுக்கொண்டாள் – என்று தாய் வியக்கிறாள்.
தேன் கலந்த சுவையான பாலை தகதகக்கும் பொன் கிண்ணத்தில் ஏந்திக்கொண்டு, நரைமுடி ஏறி அரித்துக்கொண்டிருக்கும் செம்மையான முதிய செவிலியர் உண்ணும்படி வற்புறுத்துகின்றனர். என் மகள் உண்ண மறுக்கிறாள்.
செவிலியர் தம் கையிலுள்ள சிறிய கோலால் உண்ணும்படி வற்புறுத்திப் புடைக்க ஓங்குகின்றனர்.
என் மகள் வீட்டுப் பந்தல் முழுவதும் அங்குமிங்கும் ஓடுகிறாள். முத்துப்பரல் இருக்கும் கால்-சிலம்பு ஒலிக்கும்படி கால் கடுக்க ஓடுகிறாள். இப்படி செவிலியரின் ஏவலை மறுக்கும் என் சிறு விளையாட்டுப் பிள்ளை. செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவள். இவள் குடும்பப் பெண்ணுக்கு உரிய அறிவையும் ஒழுக்க-நெறியையும் எங்கு உணர்ந்துகொண்டாள்? விளங்கவில்லையே. மணந்துகொண்ட கணவன் குடும்பத்தில் வறுமை. தந்தை உணவு அனுப்பி வைக்கிறான். அதனை அவள் உண்ண மறுக்கிறாள். தன் கணவன் வீட்டு உணவை ஒரு வேளை பட்டினி கிடந்து மறு வேளை உண்கிறாள். இது ஒழுக்கலாற்றின் மதுகை (வலிமைத்திறம்).
இந்த நல்லறிவையும், ஒழுக்கலாற்றையும் எங்குக் கற்றுக்கொண்டாள்?