நற்றிணைப் பாடல் 96:
”இதுவே, நறு வீ ஞாழல் மா மலர் தாஅய்,
புன்னை ததைந்த வெண் மணல் ஒரு சிறை,
புதுவது புணர்ந்த பொழிலே; உதுவே,
பொம்மற் படு திரை நம்மோடு ஆடி,
புறம் தாழ்பு இருளிய பிறங்குகுரல் ஐம்பால்
துவரினர் அருளிய துறையே; அதுவே,
கொடுங் கழி நிவந்த நெடுங் கால் நெய்தல்
அம் பகை நெறித் தழை அணி பெறத் தைஇ,
தமியர் சென்ற கானல்” என்று ஆங்கு
உள்ளுதோறு உள்ளுதோறு உருகி,
பைஇப் பையப் பசந்தனை பசப்பே.
பாடியவர்: கோக்குளமுற்றனார்
திணை: நெய்தல்
பொருள்:
அவரோடு பழகிய இடங்களை எண்ணி எண்ணி மேனி பசபசக்கிறது என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.
ஞாழல் மலரும் புன்னை மலரும் கொட்டிக்கிடக்கும் இந்த மணல்வெளியின் ஒரு பக்கந்தான் முதன்முதலாக அவரும் நானும் கூடித் திளைத்த பொழில். உதுவே, (உதுதான் - அவர்களின் கண்ணுக்குத் தெரியுமிடம்)
பொங்கி வரும் கடலலையில் அவர் நம்மோடு விளையாடி, நனைந்து பின்புறம் தொங்கும் ஐம்பால் கூந்தலை உலர்த்திவிட்ட துறை. அதுவே (அதுதான் – அவர்களின் கண்ணுக்குத் தெரியாத தொலைவிடம்)
வளைந்துகிடக்கும் உப்பங்கழியில் நிமிர்ந்து பூத்துக்கிடக்கும் நெய்தல் பூக்களையும், அதனோடு முரண்பட்டுக் கிடக்கும் தழைகளையும் ஒன்றாகச் சேர்த்து அவர் தழையாடை தைத்துத் தந்த கானல். என்றெல்லாம் நினைத்து நினைத்து, அவர் இல்லாமையால் உருகி, மெல்ல மெல்ல மேனியில் பசப்பு ஊர்கிறது. (பசபச என்னும் உணர்வு தோன்றுகிறது)