நற்றிணைப் பாடல் 24:
‘பார் பக வீழ்ந்த வேருடை விழுக்கோட்டு
உடும்பு அடைந்தன்ன நெடும் பொரி விளவின்,
ஆட்டு ஒழி பந்தின், கோட்டு மூக்கு இறுபு,
கம்பலத்தன்ன பைம் பயிர்த் தாஅம்
வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆர் இடைச்
சேறும், நாம்’ எனச் சொல்ல- சேயிழை!-
‘நன்று’ எனப் புரிந்தோய்; நன்று செய்தனையே;
செயல்படு மனத்தர் செய்பொருட்கு
அகல்வர், ஆடவர்; அது அதன் பண்பே.
பாடியவர் கணக்காயனார்
திணை பாலை
பொருள்:
“தரையைப் பிளந்து இறங்கிய வேர், பெரிய கிளைகள், உடும்பு அடைந்ததைப் போன்ற அடிமரத்தையும் கொண்டது விளா மரம்… இத்தகைய நெடிய விளாமரத்தின் காம்புகளிலிருந்து உதிர்ந்த பழங்கள் விளையாடிவிட்டுத் தூக்கியெறிந்த பந்துகள் போல, கம்பளம் போன்ற பசுமையான பயிர்களில் பரவிக் கிடக்கின்றன. அந்த விளாம் பழங்களை உணவாகக்கொண்டு, வேற்று நாட்டுக்குக் கடின வழிகளில் ‘நாம் போவோம்' என்றார் தலைவர்;. ‘நல்லது' என்று நீ விரும்பிக் கூறினாய்; நல்லது செய்தாய் நீ. ஆண்கள் செயல்படும் மனமுடையவர்;. பொருள் ஈட்டச் செல்வர்; பொருளுக்கு ஆடவரைக் கவர்வதே அதன் பண்பு!” என்று தோழி தலைவியைப் பாராட்டுகிறாள்.