நற்றிணைப் பாடல் 25:
அவ் வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன
செவ் வரி இதழ சேண் நாறு பிடவின்
நறுந் தாது ஆடிய தும்பி, பசுங் கேழ்ப்
பொன் உரை கல்லின், நல் நிறம் பெறூஉம்
வள மலை நாடன் நெருநல் நம்மொடு
கிளை மலி சிறு தினைக் கிளி கடிந்து அசைஇ,
சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன்; பெயர்ந்தது
அல்லல் அன்று அது- காதல் அம் தோழி!-
தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா
வண்டு ஓரன்ன அவன் தண்டாக் காட்சி
கண்டும், கழல் தொடி வலித்த என்
பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே!
பாடியவர் பேரி சாத்தனார்
திணை குறிஞ்சி
பொருள்:
முதுகில் போட்ட அரக்குப் பத்து செதில் செதிலாகக் காணப்படுவது போல செம்மையான (ஒழுங்கான) வரியடுக்குகளுடன் பிடவம்பூ பூத்திருக்கிறது. அதனுடைய மணமானது நீண்டதூரம் வரை இருக்கிறது. பிடவம் பூவின் மகரந்தத் துகள்கள் உதிர்ந்து அப்பூவில் தேன் உண்ணும் வண்டு பொன் உரைத்துப்பார்க்கும் கட்டளைக் கல் போலத் தோன்றுகிறது. அப்படிப்பட்ட பிடவ-மரம் மிகுதியாக உள்ள மலைநாட்டின் தலைவன் அவன். அந்த மலைநாடன் நேற்று நம்மோடு இருந்தான். நாம் கிளி ஓட்டும்போது உடனிருந்து ஓட்டினான். பின்னர் சொல்லுமிடம் சொல்லாமல் சென்றுவிட்டான். அது துன்பம் அன்று. என் காதல் தோழியே! பூவில் தேனை உண்டதும் வண்டு ஓடிவிடுவதுதானே வழக்கம். அப்படித்தான் அவன் செய்தான். நான் அவனைத் தடை செய்யாமல் இருந்த ஜதண்டாஸ காட்சியைக் கண்டும் என் தோளில் இருக்கும் தொடியும், முன்கையில் இருக்கும் வளையலும் நினைத்துக்கொண்டு கழன்று நழுவுகின்றன. என் பண்பில்லாத செயலைச் சொல்லிக்காட்டுகின்றன. இப்படிச் சொல்லி தலைவி கவலைப்படுகிறாள். இப்படி முன்பு நடந்துகொண்டாயே, இப்போது அவர் வந்திருக்கிறார், ஏற்றுக்கொள் – என்று தோழி கூறுகிளாள்
அதிகமான பளுவை முறை தவறித் தூக்கும்போது மூச்சுப் பிடிப்பு எற்படும். அப்போது முதுகு வலிக்கும். திரும்பும்போது இடுப்பும், கழுத்தும் வலிக்கும். இதற்கு இளஞ்சூட்டில் அரக்குப்பத்துப் போடுவர். அரக்கு இறுக்கி இழுப்பதால் நோய் குணமாகும்.
இக்காலத்திலும் முழங்கால் வலிக்கு இளஞ்சூட்டில் மெழுகுப் பத்துப் போட்டுக் குணப்படுத்துவது மேலைநாட்டு மருத்துவ முறைகளில் ஒன்று.
இக்கால டாக்டர் கூறியபடி நானும் என் முழங்கால் வலிக்கு மெழுகுப் பத்துப் போட்டுக் குணம் பெற்றிருக்கிறேன்.
இந்த மருத்துவ முறைமையை “அவ் வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன” என்று இந்தப் பாடல் குறிப்பிடுகிறது. அழகிய வளைந்த முதுகினை அரக்கு ஈர்த்துப் பிடிப்பது போல என்று உவமையில் சுட்டிச் செல்கிறது.