நற்றிணைப் பாடல் 23:
தொடி பழி மறைத்தலின் தோள் உய்ந்தனவே
வடிக் கொள் கூழை ஆயமோடு ஆடலின்
இடிப்பு மெய்யது ஒன்று உடைத்தே கடிக் கொள
அன்னை காக்கும் தொல் நலம் சிதைய
காண்தொறும் கலுழ்தல் அன்றியும் ஈண்டு நீர்
முத்துப் படு பரப்பின் கொற்கை முன் துறைச்
சிறு பாசடைய செப்பு ஊர் நெய்தல்
தெண் நீர் மலரின் தொலைந்த
கண்ணே காமம் கரப்பு அரியவ்வே.
திணை: குறிஞ்சி
பாடியவர்: கணக்காயனார்
பொருள்:
வாரி முடித்த கூந்தலையுடைய தலைவியின் வளையல் கழன்று விழாமல் பார்த்துக்கொள்வதால், தோள்களின் தொய்வு தெரிகிறது. தோழிகளுடன் விளையாடுவதால் உண்டான களைப்பாக அது நினைக்கப்பட்டது.
அவளை, அவள் அம்மா அதிகமாகக் காவல் செய்கிறாள். ஆனாலும், அவள் பழைய அழகு சிதையும்படிப் பார்க்கும்போதெல்லாம் அழுகிறாள். நீரில் முத்துக்கள் விளையும் கடற் பரப்புடையது கொற்கை நகர். அதன் முன் துறையில் சிறிய பச்சை இலைகள் கொண்ட அழகான நெய்தற் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. அந்தத் தெளிந்த நீர்ப் பூவைப் போன்றது அவள் கண்கள்! அவற்றின் அழகு கெட்டது! – ஆனால் அக்கண்களால் காதலை மறைக்க முடியவில்லை. “எனவே விரைந்து தலைவியை வரைந்துகொள்ள (மணமுடிக்க) வா” என்று தோழி, தலைவனிடம் கூறுகிறாள்.