• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

Byவிஷா

Aug 21, 2022

நற்றிணைப் பாடல் 22:

கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினை
முந்து விளை பெருங் குரல் கொண்ட மந்தி
கல்லாக் கடுவனொடு நல் வரை ஏறி,
அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு, தன்
திரை அணற் கொடுங் கவுள் நிறைய முக்கி,
வான் பெயல் நனைந்த புறத்த, நோன்பியர்
கை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன்
வந்தனன்; வாழி- தோழி!- உலகம்
கயம் கண் அற்ற பைது அறு காலை,
பீளொடு திரங்கிய நெல்லிற்கு
நள்ளென் யாமத்து மழை பொழிந்தாங்கே.

பாடியவர் பாடியவர் பெயர் கிடைக்கவில்லை
திணை குறிஞ்சி

பொருள்:
குளம் நீர் வற்றிக் காய்ந்திருக்கும்போது கதிர் வாங்கும் நிலையிலுள்ள நெல்லுக்கு மழை பொழிவது போல அவன் வந்திருக்கிறான். தலைவியைத் திருமணம் செய்துகொள்ளப் பெண் கேட்டுத் தலைவன் வந்திருக்கிறான். இந்தச் செய்தியைத் தோழி தலைவியிடம் பகிர்ந்துகொள்கிறாள்.
தினை விளைந்திருக்கிறது. கொடிச்சி தினைப்புனம் காக்கிறாள். ஆண்குரங்கு தினைக்கதிரைக் கிள்ளிக்கொண்டு பாறை உச்சிக்குச் சென்று கையால் ஞெமிண்டி, தன் மடிப்பு வாய் நிறைய அடக்கிக்கொண்டு கொட்டும் மழையில் குச்சி ஒன்றைப் பிடித்துக்கொண்டு மரத்தில் அமர்ந்திருக்கிறது. இது நோன்பு இயற்றும் முனிவன், கையில் தண்டு ஊன்றிக்கொண்டு தவம் செய்வது போல் தோன்றுகிறது. இப்படிப்பட்ட மலைநாட்டை உடையவன் அந்தத் தலைவன்.