• Thu. Feb 13th, 2025

இலக்கியம்

Byவிஷா

Jun 8, 2023

நற்றிணைப் பாடல் 182:

நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்று
ஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்
பாவை அன்ன நிற் புறங்காக்கும்
சிறந்த செல்வத்து அன்னையும் துஞ்சினள்
கெடுத்துப்படு நன் கலம் எடுத்துக் கொண்டாங்கு
நன் மார்பு அடைய முயங்கி மென்மெல
கண்டனம் வருகம் சென்மோ தோழி
கீழும் மேலும் காப்போர் நீத்த
வறுந் தலைப் பெருங் களிறு போல
தமியன் வந்தோன் பனியலை நீயே

திணை: குறிஞ்சி

பொருள்:

நிலா மறைந்துவிட்டது. இருள் தோன்றிவிட்டது. அகன்ற பெரிய மனையில், ஓவியம் போன்ற பாவையாகிய உன்னை, சிறந்த செல்வம் போல் காக்கும் தாயும் உறங்கிவிட்டாள். வைத்த இடம் தெரியாமல் தேடிக்கொண்டிருந்த அணிகலன் கிடைத்துவிட்டது போல உன் காதலன் வந்திருக்கிறான். அவன் மார்பில் அடங்கி அவனை தழுவலாம். மெல்ல மெல்லச் செல்லலாமா, தோழி!
ஆண்யானை வந்திருப்பது போல வந்திருக்கிறான். மேலே ஏறிய ஆள் இல்லாமலும், கீழை இருந்து கொண்டு நடத்தும் ஆள் ,ல்லாமலும் வந்திருக்கும் யானை போல் வந்திருக்கிறான். தமியனாக (தனியனாக) வந்திருக்கிறான். நீ வருந்த வேண்டாம் (பனியலை). செல்லலாமா என்று தோழி தலைவியை வினவுகிறாள்.