நற்றிணைப் பாடல் 181:
உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல்
பிற புலத் துணையோடு உறை புலத்து அல்கி
வந்ததன் செவ்வி நோக்கி பேடை
நெறி கிளர் ஈங்கைப் பூவின் அன்ன
சிறு பல் பிள்ளையொடு குடம்பை கடிதலின்
துவலையின் நனைந்த புறத்தது அயலது
கூரல் இருக்கை அருளி நெடிது நினைந்து
ஈர நெஞ்சின் தன் வயின் விளிப்ப
கையற வந்த மையல் மாலை
இரீஇய ஆகலின் இன் ஒலி இழந்த
தார் அணி புரவி தண் பயிர் துமிப்ப
வந்தன்று பெருவிறல் தேரே
உய்ந்தன்றாகும் இவள் ஆய் நுதற் கவினே
திணை : முல்லை
பொருள்:
கூரை வீட்டுக்குள்ளே இறைவானத்தில் கூடு கட்டிக்கொண்டு வாழும் சிட்டுக்குருவியின் ஆண்குருவி வேறு நிலத்தில் வாழும் சிட்டுக்குருவியோடு சேர்ந்திருந்துவிட்டுத் தன் பெண் குருவியிடம் வந்தது. அதன் முகத்தைப் பார்த்த பெண்சிட்டு தன் சிறகுகளை ஈங்கை மலர் பூத்துக் கிட்டப்பது போலச் சிலிர்த்துக்கொண்டு தன் கூட்டிலிருந்த சிட்டுக்குருவிப் பிள்ளைகளுடன் சேர விடாமல் துரத்தியது. ஆண்சிட்டு வெளியே தூறலில் நனைந்துகொண்டு உடல் கூம்பிய நிலையில் அமர்ந்திருந்தது. அதனைப் பார்த்த பெண்சிட்டு நெஞ்சில் ஈரம் (இரக்கம்) கொண்டு ஆண்சிட்டை உள்ளே வந்துவிடும்படி அழைத்தது. இப்படி மயக்கமும் கலக்கமும் அடையும் மாலை வேளை வந்தது. அந்த மாலை வேளையில் பெருவிறலாகிய அவன் தேர் வந்தது. ஒலி கேட்காத பூமாலை அணிந்திருக்கும் குதிரை பூட்டிய தேர் வந்தது. இனி, பசலை பாய்ந்திருக்கும் இவளது நெற்றி ஒளி பெற்றுத் திகழும். தோழி தலைவியிடம் இவ்வாறு கூறுகிறாள்.