நற்றிணைப் பாடல் 171:
நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை
வேனிற் குன்றத்து வௌ; வரைக் கவாஅன்
நிலம் செல செல்லாக் கயந் தலைக் குழவி
சேரி அம் பெண்டிர் நெஞ்சத்து எறிய
ஊர் ஆன்கன்றொடு புகுதும் நாடன்
பன் மலை அருஞ் சுரம் இறப்பின் நம் விட்டு
யாங்கு வல்லுந மற்றே ஞாங்க
வினைப் பூண் தெண் மணி வீழ்ந்தன நிகர்ப்பக்
கழுது கால்கொள்ளும் பொழுது கொள் பானாள்
ஆர்வ நெஞ்சமொடு அளைஇ
மார்பு உறப் படுத்தல் மரீஇய கண்ணே
பாடியவர் : ஆசிரியர் பெயர் இடம் பெறவில்லை
திணை: பாலை
பொருள்:
நீர் உண்ண விரும்பிய யானை கோடை காலத்தில் மலைப் பிளவுகளைக் கடந்து செல்லும். நெடுந்தொலைவு நடக்க முடியாத அதன் கன்று ஊர் வாழ் பசுவின் கன்றுகளோடு சேர்ந்து வரும். அது கண்டு ஊர்ச்சேரியில் வாழும் பெண்டிர் நெஞ்சம் பதைப்பர். இப்படிப்பட்ட நிலப்பகுதியின் தலைவன் அவன்.
அவன் நம்மை விட்டுவிட்டு மலைக்காட்டு வழியில் செல்வானாயின் என் கண் எப்படி அவனைக் காணாமல் இருக்கும்? நள்ளிரவில், பேய் நடமாடும் நள்ளிரவில், யாமம் என்று அறிவிக்கும் மணியை அடிப்பர். அதற்கென்று ஆள் அமர்த்தப்பட்டிருப்பர். அவர்கள் ‘வினை பூண் தெண்மணி’ அடிக்கும் தோழிலாளர்கள். அவர்கள் மணி அடிக்கும்போது அவன் மார்பைத் தழுவிய என் கண் அவன் காட்டில் செல்வதைத் தாங்கிக்கொள்ளுமா? – தலைவி தன் தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.