நற்றிணைப் பாடல் 168:
சுரும்பு உண விரிந்த கருங் கால் வேங்கைப்
பெருஞ் சினைத் தொடுத்த கொழுங் கண் இறாஅல்
புள்ளுற்றுக் கசிந்த தீம் தேன் கல் அளைக்
குறக் குறுமாக்கள் உண்ட மிச்சிலைப்
புன் தலை மந்தி வன் பறழ் நக்கும்
நன் மலை நாட பண்பு எனப் படுமோ
நின் நயந்து உறைவி இன் உயிர் உள்ளாய்
அணங்குடை அரவின் ஆர் இருள் நடு நாள்
மை படு சிறு நெறி எஃகு துணை ஆக
ஆரம் கமழும் மார்பினை
சாரற் சிறுகுடி ஈங்கு நீ வரலே
ஆசிரியர் பெயர் தெரியவில்லை
திணை: குறிஞ்சி
பொருள்:
வேங்கை மரம் சுரும்பு தேன் உண்ணும்படிப் பூத்துக் குலுங்கும். தேன் உண்ணும் சுரும்பு அந்த மரத்தின் பெருங்கிளையில் கண்ணறைகளுடன் கூடிய தேன்கூடு (இறால்) கட்டியிருக்கும். பறவை அதில் மோதித் தேன் ஒழுகும். அதனை அங்கு வாழும் குறவர்களின் சிறுவர்கள் கிண்ணத்தில் பிடித்து உண்பர். அவர்கள் உண்ட மிச்சத்தைக் குரங்குக் குட்டி நக்கும். இப்படிப்பட்ட மலையின் தலைவன் அவன். அவனைத் தோழி வினவுகிறாள். உன்னை விரும்பும் இவளின் உயிரைப் பற்றி நீ கவலை கொள்ளவில்லை. உனக்கு ஏதாவது என்றால் இவள் இறந்துவிடுவாளே. பாம்புகள் மேயும் மலையில் நள்ளிரவில் வருகிறாய். இருண்டு கிடக்கும் பாதையில் வேலை மட்டும் துணைக்கு வைத்துக்கொண்டு வருகிறாய். மார்பில் பூசியிருக்கும் சந்தனம் சாரல்மலையில் இருக்கும் ஊரே கமழும்படி வருகிறாய். இப்படி வருவது பண்பு என்று போற்றப்படுமா? திருமணம் செய்துகொண்டு மகிழலாமே.