• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

விளையாட்டு மைதானங்களில் மதுபானம் – அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி..!

Byவிஷா

Oct 31, 2023

விளையாட்டு மைதானங்களில் மதுபானங்களை அனுமதித்தால், அதனால் ஏற்படும் விபரீத விளைவுகளை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில், மதுபானங்கள் பரிமாற வசதியாக தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளில் திருத்தம் செய்து, தமிழ்நாடு அரசு சிறப்பு உரிமம் வழங்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து வழக்குரைஞர்கள் சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாறும் வகையில் உரிமம் வழங்குவது தொடர்பான அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர், விளையாட்டு மைதானங்கள் சர்வதேச கருத்தரங்கு நடைபெறும் இடங்கள் பொது இடங்கள் என்றும் பொது இடங்களில் மது அருந்துவது சட்டப்படி குற்றம் என்றும் தெரிவித்தார். இதையடுத்து, விளையாட்டு மைதானங்களில் மதுபானங்கள் வைத்திருக்க அனுமதித்தால் ஏற்படும் விளைவுகள் எவ்வாறு சமாளிக்கப்படும், ஒரு விளையாட்டு மைதானத்தில் 75 ஆயிரம் பேர் திரளக்கூடும்; அவர்கள் மதுபானங்கள் வைத்திருக்க அனுமதித்தால் என்னவாகும்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கல்வி நிறுவன கருத்தரங்குகளில் மதுபானங்கள் பரிமாறக் கூடாது என அறிவிக்கப்பட்டதைப் போல, விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடிய விளையாட்டு மைதானங்களும் விலக்கி வைக்கப்பட்டுள்ளதா என விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசின் தலைமை வழக்குரைஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 24- ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.