“உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்செம்மல் சிதைக்கலா தார்” என்ற திருக்குறள்தான் இந்தப் படத்தின் மையக் கரு.
இதன் அர்த்தம், “நம்மைப் பகைப்பவரின் செருக்கை ஏளனமாய் எண்ணி அழிக்காமல் விடுபவர்… மூச்சு விடும் நேரத்திற்குள் பகைவரால் நிச்சயம் அழிக்கப்படுவர்” என்பதுதான்..! இதுதான் விடுதலை திரைப்படத்தின் ஒருவரிக் கதை ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘கோ’ ஆகிய மாபெரும் வெற்றிப் படங்களைத் தொடர்ந்து,
RS Infotainment நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் ‘விடுதலை’ விஜய் சேதுபதி, சூரி, பவானிஸ்ரீ, கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், தமிழ், சேத்தன், மூணாறு ரமேஷ் மற்றும் பல முக்கிய
நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்திருக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜாக்கி கலை இயக்கம் செய்ய, பீட்டர் ஹெயின் சண்டை இயக்கம் செய்துள்ளார். ஆர்.ராமர் படத் தொகுப்பு செய்துள்ளார். கதை – ஜெயமோகன்(துணைவன்), பாடல்கள் – சுகா, யுகபாரதி, வெற்றிமாறன் இயக்கியிருக்கிறார்.
1992-ம் ஆண்டில் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் வலதுசாரி எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி வெளிவந்த ‘துணைவன்’ என்ற சிறுகதையைத் தழுவி இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
சிறுகதைதான் இந்தப் படத்திற்கான அடித்தளம் என்றாலும் அந்த சிறுகதை பேசிய நக்சல்கள் உருவான வரலாறு தவிர வேறு எந்தக் கதையையும் அதிலிருந்து இயக்குநர் எடுத்தாளவில்லை.
‘நக்ஸல்கள்’ என்றழைக்கப்பட்ட மிக தீவிரமான அரசியல் செயல்பாட்டாளர்கள் மிதமான அரசியல் தன்மை நாட்டில் செத்துவிட்டதை உணர்ந்த பின்பு தங்களது கைகளில் ஆயுதமேந்த ஆரம்பித்தார்கள். மேற்கு வங்காளத்தில் சாரு மஜும்தார் தலைமையில் 1967-ல் ‘நக்ஸல்பாரி’ என்ற சிற்றூரில் துவங்கிய இந்தப் பொறி, நாளடைவில் இந்தியா முழுவதுமே பரவியது.
அப்பாவி மக்களின் அவலக் குரலைக் கேட்கக் கூட விரும்பாத அரசுகளை அப்புறப்படுத்த தேர்தல் மட்டுமே நேர் வழியல்ல. ஆயுதப் போராட்டத்தையும் இதில் சேர்த்துக் கொண்டால்தான் இந்த வர்க்கப் போராட்டம் ஜெயிக்க முடியும் என்று நினைத்த சில இளைஞர்களால் உருவான நக்சலைட் இயக்கம் தமிழ்நாட்டில் 1980-களில் தஞ்சாவூரில் துவங்கி அப்போதைய வட ஆற்காடு, தென்னாற்காடு மாவட்டங்களில் இருந்த காட்டுப் பகுதிகளில் பதுங்கியிருந்தபடி ஆயுதமேந்தி அரசுகளை எதிர்த்த நக்ஸல்கள் என்ற அந்தப் போராளி குழுக்களில் ஒரு பகுதியினரின் கதைதான் இந்த ‘விடுதலை’ திரைப்படம்.
கு.கலியப்பெருமாள், அப்பு, பொன்பரப்பி தமிழரசன் என்று அப்போதைய தமிழகத்தின் நக்ஸல் தலைவர்களின் பின்னணியில் நடந்த கதையில் கொஞ்சத்தையும், மீதியை இப்படித்தான் நடந்திருக்கும் என்கிற கற்பனையினாலும் விடுதலையை இரண்டரை மணி நேர படமாக தந்திருக்கிறார் இயக்குநர் வெற்றி மாறன்.
1987-ல் அருமபுரி அருகேயுள்ள காட்டுப் பகுதியில் நக்ஸல்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதை பார்த்து அப்போதைய அரசு அதே காட்டுப் பகுதியிலேயே அவர்களை ஒழிப்ப தற்காக தனி போலீஸ் குழுவை முகாம் போட வைத்திருந்தது. அந்தக் காட்டுப் பகுதியில் பதுங்கியிருக்கும் நக்ஸல்களின் தலைவரான பெருமாள் என்னும் வாத்தியாரை தேடும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. போலீஸ் கம்பெனியில் ஜீப் டிரைவராக வேலை செய்ய வருகிறார் சூரி. அந்தக் கம்பெனிக்கு கமாண்டிங் ஆபீஸராக இருப்பவர் சேத்தன். சூரி நல்லவர். அதே சமயம் சூதுவாது தெரியாத மனிதர்.
சேத்தனின் கட்டளையை மீறும் சூரியை அவருக்குப் பிடிக்கவேயில்லை. சூரிக்கு தண்டனைக்கு மேல் தண்டனையைக் கொடுக்கிறார். இதைக்கூட சூரி பெருந்தன்மையாய் ஏற்றுக் கொள்கிறார். ஆனால் நான் செய்ததில் தவறில்லை என்கிறார்.
அதே சமயம் அதே காட்டுப் பகுதியில் வசித்து வரும் நாயகி பவானிஸ்ரீயுடன் நட்பாகி பழக, சூரிக்கு அவர் மீது காதல் பிறக்கிறது. நாயகிக்கும் அதே உணர்வுதான். இந்தக் காதல் கை கூடும்போது அந்தக் காட்டுப் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் சில காவலர்கள் இறந்துபோக நிலைமை தீவிரமாகிறது.
இப்போது அந்தப் பெருமாள் வாத்தியாரை கைது செய்ய தமிழக அரசு சுனில் மேனன் என்ற கெளதம் மேனனை அனுப்பி வைக்கிறது. கெளதம் மேனன் அந்தக் கிராமத்து மக்களிடையே நல்லவிதமாகப் பேசி பழகி அவர்களது அன்பைப் பெற்று பெருமாள் வாத்தியாரைப் பிடிக்க முயல்கிறார்.
இது முடியாமல் போக.. அடுத்து நடந்த ஒரு மோதலில் காவலர்கள் மேலும் பலியாக, அந்தப் பகுதியில் வசித்து வந்த மொத்த மக்களையும் பிடித்து வரும் போலீஸ் அவர்கள் அனைவரையும் சித்ரவதை செய்கிறது.
இந்தப் பட்டியலில் தனது காதலி பவானிஸ்ரீயும் இருப்பதை அறியும் சூரி அவரை மட்டுமாவது காப்பாற்ற தனது உயரதிகாரிகளிடம் கெஞ்சுகிறார். ஆனால் பலனளிக்காமல் போக.. “அந்தப் பெருமாள் வாத்தியார் இருக்கும் இடம் எனக்குத் தெரியும்…” என்று கெளதம் மேனனிடம் சொல்கிறார்.
அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் இந்த ‘விடுதலை’ முதல் பாகத்தின் கதை.
இதுநாள் வரையிலும் தான் நடித்த காமெடி கதாப்பாத்திரங்கள் அத்தனையும் வீண் என்று சொல்லும் அளவுக்கு, ஒரு அப்பாவியான கிராமத்து பட்டிக்காட்டான் வேடத்தை அப்படியே திரையில் காட்டியிருக்கிறார் சூரி.
ஒத்தையடிப் பாதையில் நுழையும் சப்-இன்ஸ்பெக்டரிடம் “எனக்கு வரலை ஸார். நீங்க போயிட்டு வாங்க” என்று சூரி சாதாரணமாகச் சொல்ல அவரோ, “இதுதான் பாதை. வா” என்று சொல்லும்போது படத்தின் தன்மையையும் மீறி சிரிப்பலை எழுகிறது. இ்ப்படித்தான் தனது கேரக்டர் ஸ்கெட்ச்சோடு ஒன்றிப் போய் பல இடங்களில் தனது அப்பாவித்தனத்தினாலேயே சிரிக்க வைத்திருக்கிறார் சூரி.
வழமையான சினிமாக்களில் வரும் காதல் இல்லாமல்… காதல் என்ற உணர்வு எப்படி மெல்ல, மெல்ல தலை தூக்கி கடைசியில் கல்யாணப் பேச்சில் வந்து முடிவதாக இயக்குநர் எழுதியிருக்கும் புதுமையான இந்தக் காதல் திரைக்கதை படத்தின் மிகப் பெரிய பலம்.
கல்யாணப் பேச்சை எடுத்த பின்பு ஒட்டு மொத்தக் காவல் துறையும் தேடி வரும் பெருமாளின் உறவுக்காரப் பெண்தான் பவானிஸ்ரீ என்பதை அறிந்தவுடன் பேச்சை முறித்துக் கொண்டு செல்லும் சூரி, பின்பு அதற்காக மன்னிப்பு கேட்டு மீண்டும் காதலை வளர்த்துக் கொள்ள வரும்போது நமக்கே மிகவும் பிடித்தமானவராகிறார்.
பவானிஸ்ரீ போலீஸில் சித்ரவதைப்படும்போது அந்த மைதானத்தில் அங்கிட்டும், இங்கிட்டுமாக ஓடிப் போய் காதலியை மீட்க அல்லலோகப்படும் சூரி, நமது ஒட்டு மொத்த பரிதாபத்தையும் பெற்றுவிட்டார்.
இறுதியில் பெருமாளிடம் “தயவு செஞ்சு வந்து சரண்டராகிருங்க ஸார்… உங்களாலல அப்பாவி மக்களெல்லாம் கஷ்டப்படுறாங்க…” என்று சொல்லி கெஞ்சும்போது அப்பாவித்தனத்தின் உச்சத்துக்கே போய்விட்டார் சூரி.
நாயகியாக நடித்திருக்கும் பவானிஸ்ரீ அச்சு அசலாக அந்தக் கிராமத்துப் பெண்ணாகவே மாறிவிட்டார். அவருடைய தோற்றமும், உடல்வாகும்கூட அந்தக் கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்தியுள்ளது.
சூரியுடனான காதலை சொல்ல முடியாமல் தவித்து மறைமுகமாக எடுத்துச் சொல்லி பின்பு காதலாகி உருகும் காட்சிகளிலும், தனது பாட்டி இறந்தவுடன் அவர் கதறும், கதறலும், போலீஸ் சித்ரவதையில் அவர் படும் துயரமும் மொத்தமாக இந்தக் கதாப்பாத்திரத்தை அவர் ஏற்றதினால், சிறப்பான அறிமுகத்தை அவருக்குத் தந்திருக்கிறது.
சுனில் மேனனாக நடித்திருக்கும் கெளதம் மேனன் முதலில் நல்லவராக வேடமிட்டு தனது முகத்தைக் காட்டியவர் பின்பு தனக்குள் இருக்கும் இன்னுமொரு மிருக குணத்தையும் காட்டுகிறார். சீருடையணிந்த ஒரு காவல்துறை அதிகாரிக்கு என்ன மன நிலையிருக்குமோ அதையே வெளிப்படுத்தியிருக்கிறார் கெளதம் மேனன்.
இவருக்குச் சற்றும் சளைக்காத இன்ஸ்பெக்டரான சேத்தன் இறுதியில் மிகக் கொடிய கிரிமினல் போலீஸாகாகவும் தன்னைக் காட்டிக் கொள்கிறார். சூரி தன்னிடம் மன்னிப்பு கேட்காததால் அவருக்குத் தண்டனை கொடுத்து அதை ரசிப்பவராகவும், சூரி மன்னிப்பு கேட்கும்வரையிலும் அவரை பார்க்கவே விரும்பாத மனிதராக தனது பேச்சுக்கள் அனைத்திலும் காட்டும் போலீஸ் துரை தனத்தில் சேத்தனை ரசிக்க முடிகிறது.
மேலும் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் தமிழ், உளவாளியாக இருக்கும் போலீஸ் ஏட்டு என்று இவர்களது கதாபாத்திம் மூலம் காவல்துறையில்இருக்கும் ஆண்டான்-அடிமை கலாச்சாரத்தை பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

தலைமைச் செயலாளராக நடித்திருக்கும் ராஜீவ் மேனனின் கதாப்பாத்திரம்,அவர் பேசும் வசனங்கள் அனைத்துமே இந்தியா முழுமைக்கும் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் ஒட்டு மொத்த மன நிலையைத்தான் காட்டுகிறது. அதிகார வர்க்கத்திற்கும், சாமான்ய மக்களுக்குமான இடைவெளி ஏன் இத்தனை ஆண்டு காலமாக தீர்க்கப்படவில்லை என்பதை இந்த ராஜீவ் மேனன் பேசும் பேச்சில் இருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.
படத்தில் நாயகன் போன்று வேலை செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். துவக்கக் காட்சியில் காட்டப்படும் ரயில் விபத்தினை படமாக்கியிருக்கும்விதமே அற்புதம். அழகு.. படத்தின் மிகப் பெரிய பட்ஜெட்டை இந்தக் காட்சியே பிடித்துவிட்டது என்று இயக்குநர் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.
சில சித்ரவதை காட்சிகள், நிர்வாணக் காட்சிகளை அந்த பீலிங் குறையாமலும், காட்சியுணர்வை சிதைக்காத வண்ணமும் படமாக்கியிருக்கிறார்கள்.
‘காட்டு மல்லி’, ‘உன்னோட நடந்தா’ என்ற இரண்டு பாடல்களும் பொருத்தமான இடங்களில் அமைந்து நம் மனதுக்கு இதமாகியிருக்கின்றன. இளையராஜா குரலில் ஒற்றை வரியாக ஒலிக்கும் ‘ஆராரிரோ’ பாடல் அந்த நொடியில் மனதைப் பிசைகிறது.
ஆவணப்படைப்பாகும் சூழல் இருந்தும் அப்படியொன்று நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே அரசுத் தரப்பு, நக்லஸ்கள் தரப்பு, அப்பாவி பொதுமக்கள் என்று மூன்று தரப்பினரின் வாக்கு மூலத்தையும் சமமான அளவில் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
படத்தின் கதை 1987-ல் நடக்கிறது. அப்போது தமிழகத்தில் எம்.ஜி.ஆரின். தலைமையில் அதிமுக ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது இதே தர்மபுரி மாவட்டத்தில் கோலோச்சி கொண்டிருந்த நக்ஸலைட்டுகளை தீர்த்துக் கட்ட அப்போதைய டி.ஐ.ஜி. தேவாரத்தின் தலைமையில் போலீஸ் படையை அனுப்பினார் எம்.ஜி.ஆர்.
தேவாரத்தின் தலைமையிலான போலீஸ் படை சில ஆண்டுகளிலேயே அந்தப் பகுதியில் இருந்த மொத்த நக்ஸலைட்டுகளையும் ஒழித்துக் கட்டினாலும், அப்பாவி பொதுமக்களுக்கு அவர்கள் செய்த கொடுமைகள் சொல்லிமாளாது
அருவருக்கத்தக்கவை.
மனித உரிமை மீறல்கள் பற்றிய விழிப்புணர்வு அப்போது அதிகமாக இல்லாததும், இப்போதிருப்பதுபோல ஊடகங்களின் பலம் அப்போது இல்லை என்பதாலும் அந்த அப்பாவி மலைவாழ் மக்களின் அழுகுரல்கள் வெளி உலகத்துக்கு எட்டவில்லை.
இதே மாதிரியான போலீஸின் வேட்டையைத்தான் சில ஆண்டுகளுக்குப் பிறகு வீரப்பன் வேட்டை என்ற பெயரில் மாதேஷ்வரன் மலைப் பகுதியில் வசித்து வந்த மக்களிடம் கொடூரமான முறையில் காட்டியது இதே தேவாரத்தின் தலைமையிலான போலீஸ் படைதான்.
அரசை நிர்வகிக்கும் கட்சிக்கும், கட்சித் தலைவருக்கும் தனது ஆட்சிக் காலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடவில்லை என்ற பெயர்தான் இருக்க வேண்டும் என்கிற ஆசை. காவல்துறைக்கு தங்களைத் தவிர வேறு யாரும் நாட்டில் ஆயுதம் ஏந்தக் கூடாது என்ற ஆணவம்.
1987-ல் வால்டர் தேவாரம் தலைமையில் நடத்தப்பட்ட ஆபரேஷனின் பெயர் ‘அஜந்தா’. நக்சல்கள் வைத்த குண்டு வெடிப்பில் இறந்த இஸ்பெக்டரின் ஒருவரின் மகள் பெயர்தான் இது. இந்தப் படத்தில் ‘ஆபரேஷன் கோஸ்ட் ஹண்ட்’ என்று மாற்றியிருக்கிறார்கள்.
படத்தில் கதைக் களமான தருமபுரி, அருமபுரியாக மாறியிருக்கிறது. நக்ஸல்களின் தலைவரான கு.கலியபெருமாளை நினைவூட்டுகிறது பெருமாள் என்ற வாத்தியார் கதாப்பாத்திரம்.
ஒரு காட்சியில் கதாநாயகியின் பெயரை கேட்டு போலீஸ்காரர்கள் அவளை அடிக்கிறார்கள். நாயகியும் “தமிழரசி” என்கிறாள். “அதான்” என்கிறார் இன்ஸ்பெக்டர் சேத்தன். இது நக்ஸல்களின் தளபதியாக இருந்த பொன்பரப்பி தமிழரசனைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
யாருக்கும் முகச் சாயம் பூசாமல் மூன்று தரப்பினரின் நியாயத்தையும் இந்தப் படத்தில் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் வெற்றி மாறன். அதே நேரம் அரசுகள் சொல்வதை மட்டுமே செய்தியாக்கி விளம்பரப்படுத்தும் ஊடகங்களின் செயல்களையும் படமாக்கியிருக்கிறார்.
அதேபோல் காவல் துறைக்குள்ளேயே இருக்கும் ஏற்றத் தாழ்வுகள், சாதிய உணர்வு, ஆண்டான், அடிமை கலாச்சாரம், அரசுகள் மீதான அவர்களது கசப்புணர்வு எல்லாவற்றையும் பதிவு செய்துள்ளார் இயக்குநர்.
படத்தின் இறுதியில் காண்பிக்கப்பட்ட ‘விடுதலை பாகம்-2’-ன் முன்னோட்ட காட்சிகளே அடுத்த பாகத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காத்திருப்போம்..!!!

- கமல்ஹாசனுக்கு பதில் கூறியதி கேரள ஸ்டோரி இயக்குநர்தி கேரளா ஸ்டோரி படம் குறித்த கமல்ஹாசனின் விமர்சனம் பற்றிய கேள்விக்கு அப்படத்தின் இயக்குநர் சுதிப்டோ […]
- கேப்டன் டோனி நெகிழ்ச்சி பேட்டிகுஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி அபாரமாக வெற்றி 5 வது முறையாக சாம்பியன்ஸ் பட்டம் […]
- சாதி அரசியல் பேசும் கழுவேத்தி மூர்க்கன்-திரைவிமர்சனம்மக்களை சாதியின் பெயரால் பிரிப்பது பற்றியும், அதன் பின் இருக்கும் அரசியல் பற்றியும் பேசுகிறது `கழுவேத்தி […]
- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]
- அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழாஅவனியாபுரம் அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா. ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை […]
- வழிப்பறியில் கொள்ளைக்கு திட்டமிட்ட 4 பேர் கைதுபரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் […]
- மதுரையில் கோடை உணவுத்திருவிழாபொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் […]
- சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை படைத்த மாணவர்கள்ஆறுமணி நேரம் கண்ணைக் கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் […]
- காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டிஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் […]
- பால் பற்றாக்குறையை சமாளிக்க..,பசுந்தீவன சாகுபடி செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு..!ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் […]
- போதை மாநிலமாக மாறிய தமிழகம் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டுதமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டதாக விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.அதிமுக கழக […]
- மணிப்பூரில் மீண்டும் வன்முறை பாஜ எம்எல்ஏ வீடு தீவைத்து எரிப்புமணிப்பூரில் ராணுவ படையினருடன் நடந்த மோதலில் குக்கி தீவிரவாதிகள் 40 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக அந்த […]
- அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு : பரபரப்பான பின்னணி..!அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் வருமானவரிதுறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் மற்றும் இது தொடர்பான செய்தியாளர் […]