‘கேஜிஎப்’ படம் வெற்றியடைந்த பிறகு தென்னிந்திய மொழிகளில் நிறைய படங்கள் சுரங்க தொழிலாளர்களின் வாழ்வாதாரம், அவர்களது போராட்ட வாழ்க்கையை மையமாக கொண்டு வெளியாகியுள்ளது. இந்த வாரம் வெளியான’பத்து தல’ படம் கூட சுரங்கத்தை கதைக்களமாகக் கொண்ட படம்தான்.
கருப்புப் புழுதி பறக்கப் பறக்க படத்தை இயக்கு பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. தசரா படம் நிலக்கரிச் சுரங்கம் அருகில் இருக்கும் வீர்லபள்ளி என்ற கிராமத்தைக் கதைக்களமாகக் கொண்ட படம். அடிக்கும் காற்றில் கூடப் புழுதி பறக்கும், மண் முழுவதும் கருப்பாகவே இருக்கும் ஒரு கிராமம். மேல வீதி, கீழ வீதி என இரு வேறு பிரிவு உள்ள ஒரு கிராமம். நட்பு, காதல், காமம் என தெலுங்கு வாடை அதிகம் அடிக்கும் ஒரு படம்.
படத்தைத் தமிழில் டப்பிங் செய்தாலும் படத்தின் டைட்டிலில் சில பெயர்களைத் தவிர மற்ற பெயர்களை தெலுங்கிலேயே போட்டிருக்கிறார்கள். அக்கறையின்மையா அல்லது இது போதும் என்ற அகந்தையா எனத் தெரியவில்லை. பான் இந்தியா படம் என்று சொல்லிவிட்டு படத்தில் ஆங்காங்கே இடம் பெறும் பெயர்கள் கூட தெலுங்கில் உள்ளன. முக்கியமாக கதையின் திருப்புமுனையாக ஒரு கத்தியில் இருக்கும் பெயர் இடம் பெறும். அதுவும் தெலுங்கில் மட்டுமே காட்டுகிறார்கள்.
கீழத் தெருவைச் சேர்ந்த நானியும், மேலத் தெருவைச் சேர்ந்த தீக்க்ஷித் ஷெட்டியும் சிறு வயது முதலே நண்பர்கள். நானிக்கு சிறு வயதிலிருந்தே கீர்த்தி சுரேஷ் மீது காதல். சிறு வயதிலேயே தீக்க்ஷித், கீர்த்தியைக் காதலிக்கிறேன் எனச் சொல்ல, நண்பனுக்காக கீர்த்தியை விட்டுத் தருகிறார். தீக்க்ஷித்துக்கும், கீர்த்திக்கும் திருமணம் நடந்த அன்று தீக்க்ஷித்தை யாரோ கொன்று விடுகிறார்கள். அவரை யார் கொன்றது, நண்பனைக் கொன்றவர்களை நானி பழி வாங்கினாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
தெலுங்கில் பல படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றவர் நானி. இந்தப் படத்தில் முழுக்க முழுக்க ஆக்க்ஷன் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அப்பாவியானவர், குடித்தால் மட்டுமே அவருக்கு தைரியம் வரும். நண்பன் தீக்க்ஷித் மீது அளவு கடந்த நட்பு வைத்துள்ளவர். நண்பன் கொல்லப்பட்டதும் அவருக்குள் இருந்து ஒரு அசாத்திய தைரியம் வருகிறது. அதன்பின் ரத்தம் தெறிக்கத் தெறிக்க அடிதடிதான்.
வெண்ணிலா என்ற பால்வாடி டீச்சர் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ். கருப்பு நிற மேக்கப் போட்டால்தான் கிராமத்துப் பெண் என இயக்குனர் எண்ணம் போலும். ஏன், கிராமத்தில் சிவப்பான பெண்களே இல்லையா என்ன ?. இருந்தாலும் வெண்ணிலா கதாபாத்திரத்திற்காக தன்னை அப்படியே மாற்றிக் கொண்டிருக்கிறார் கீர்த்தி. எமோஷனலான கதாபாத்திரம். நானியும், கீர்த்தியும் போட்டி போட்டு நடித்திருப்பதுதான் இந்தப் படத்தின் வரவேற்புக்கு முக்கியமான காரணமாக அமையும்.
நானியின் நெருங்கிய நண்பனாக தீக்க்ஷித் ஷெட்டி. வில்லனாக மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, காமக் கொடூரனாக நடித்திருக்கிறார். டாம் சாக்கோவின் அப்பாவாக சமுத்திரக்கனி, ஊர் பெரிய மனிதர்களில் ஒருவராக சாய் குமார். சாம் டாக்கோ மனைவியாக சில காட்சிகளில் வந்தாலும் பூர்ணா குறிப்பிட வைக்கிறார்.
படத்தில் காமெடி இல்லை, ஆனால், காதல் அதிகம் இருக்கிறது. இடைவேளைக்குப் பின் இடம் பெறும் காதல் சம்பந்தமான காட்சிகள் படத்தை ஆக்க்ஷனிலிருந்து அப்படியே காதலுக்கு மாற்றிவிடுகிறது. பின்னர் கிளைமாக்சில் அரை மணி நேரம் வரும் சண்டைக் காட்சிகள் நம் மீதும் ரத்தம் தெறிக்கும் அளவிற்கு இருக்கிறது.
சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு, சந்தோஷ் நாராயணன் இசையமைப்பு படத்தில் குறிப்பிட வேண்டியவை. கலை இயக்குனரும் அவருடைய பங்கிற்கு உழைத்திருக்கிறார். குறிப்பாக சில்க் ஸ்மிதாவின் பெயிண்டிங்குடன் கூடிய அந்த பார், ஊர், கிளைமாக்ஸ் தசரா விழா என கடுமையாக உழைத்திருக்கிறார்.
ஆக்க்ஷன் படமா, காதல் படமா, எமோஷனல் படமா என்பதில் இயக்குனர் கொஞ்சம் குழம்பியிருக்கிறார். தெலுங்கு ரசிகர்களுக்குப் பிடிக்கலாம், தமிழ் ரசிகர்களுக்காக குரல் டப்பிங்குடன் நிறுத்தியதை காட்சிக்குக் காட்சி செய்திருக்க வேண்டும்.
தசரா – தடுமாற்றமில்லாத சமத்துவ போராட்டம்