

கேரள மாநிலம் அம்பநாடு எஸ்டேட் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண் சரிவால் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் 5-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. இதே போல் அண்டை மாநிலமான கேரள மாநிலத்திலும் அதிக அளவு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தின் மலைப் பகுதியில் அமைந்துள்ள அம்பநாடு எஸ்டேட் பகுதியில் நேற்று கனமழை பெய்துள்ளது. இதனால் கடுமையான மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் தமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கேயே தங்கியிருந்து தேயிலை தோட்டப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று பெய்த கன மழையில் தமிழர்கள் வசிக்கின்ற பகுதியில் 5-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. அதிகாலையில் பணிக்காக அனைவரும் கிளம்பிய சமயத்தில் இந்த மண்சரிவு ஏற்பட்டதால் உயிர் பலி ஏதும் ஏற்படவில்லை. மேலும் அம்பநாடு எஸ்டேட்டிற்க்கு செல்லக் கூடிய சாலைகள் மோசமான நிலையில் அங்கு யாரும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

