



குமரியின் மைந்தன் கவிமணி தாசனின் அகவை112_விழா நாகர்கோவிலில் கொண்டாட்டம் நடைபெற்றது. கவிமணிதாசன் (கவிஞர். ஆதிமூலப்பெருமாள்) பிறந்தநாள் மார்ச் .20 (20-03-1912)
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நிழலாக திகழ்ந்தவர் தான் கவிஞர் ஆதிமூலப்பெருமாள். இவர் சிறந்த ஓவியராகவும், ஒளிப்படக்கலைஞராகவும், கவிஞராகவும் திகழ்ந்து பொருளாதார மேதை டாக்டர்.ப.நடராஜன், கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன், கவிமணி, வ.ஐ.சுப்ரமணியம் ஆகியோரின் நட்பைப்பெற்றவர். கவிமணியை அதிகமாக ஒளிப்படம் எடுத்தவரும் இவரே.



நாகர்கோவில் மைய நூலகத்தில் காட்சியளிக்கும் கவிமணி உருவப்படமும், தேரூர் நூலகத்தில் காட்சியளிக்கும் கவிமணி உருவப்படமும் இவரால் வரையப்பட்டவையே. இவர் எழுதிய கவிதை நூல்களை ஆய்வுச்செய்து கொட்டாரம் கோபால் அவர்கள், “கவிமணிதாசனின் பாடல்கள் ஒரு சமுதாயப்பார்வை” என்ற நூலை எழுதியுள்ளார். இவருடைய பெயரில் கவிமணிதாசன் நற்பணி இயக்கம்” என்ற பெயரில் இலக்கிய அமைப்பு நாகர்கோவிலில் செயல்பட்டு வருகிறது. கவிமணிதாசனின் நூற்றாண்டு விழாவை இவ்வியக்கம் வெகுசிறப்பாக நாகர்கோவிலில் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இன்று (20-03-2023) நாகர்கோவிலில் கவிமணிதாசன் நற்பணி இயக்கம் சார்பி்ல் கவிமணிதாசனின் 112 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தேரூர் புலவர் .சிவதாணுபிள்ளை தலைமை தாங்கினார். விழாவில் தமிழ்வானம் சுரேஷ் ஆசிரியர்கள் பகவதிபெருமாள், விஜயேந்திரன், பழனி ஊடகர் சுவாமிநாதன், கொட்டாரம் கோபால், குமரிஎழிலன், குமரிச்செல்வன், நாஞ்சில் வீரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


