

கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா, மேள தாளங்கள் முழங்க, பக்தர்கள் புடை சூழ கோலாகலமாக நடைபெற்றது.
ராஜவீதி தேர்நிலைத் திடலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேர் புறப்பட்டு, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பகவுண்டர் வீதி வழியாக மீண்டும் ராஜவீதி தேர் நிலையை அடைகிறது. முன்னதாக கோனியம்மன் கோவிலில் இருந்து சீர்வரிசை தட்டுகளுடன் கோவில் நிர்வாகிகள் பி 1 காவல் நிலையத்திற்கு வந்து முதல் மரியாதையாக காவல் ஆய்வாளர் ஆனந்த ஜோதிக்கு பரிவட்டம் கட்டி அதன் பின்னர் சகப் பெண் போலீசார்ருடன் ராஜ வீதியில் உள்ள தேருக்கு சென்று இறைவனை வழிபடுகின்றனர். மேலும் இந்த கோனியம்மன கோவில் தேரை வழிபட்டால் வாழ்கை சுபிக்சம் பெருகும் எனவும் கல்வி செல்வம் பெருகும் எனவும் நம்பிக்கை உள்ளது.

மேலும் கோவையின் காவல் தெய்வமாக விளங்கி வருவதால் அம்மனை வழிபட்டு வருகின்றனர். கோனியம்மன் கோவில் தேரோட்டத்திற்கு பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, திருப்பூர், மேட்டுப்பாளையம், வால்பாறை, உதகை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக் கணக்கான பொதுமக்கள் தேரோட்ட நிகழ்ச்சிக்கு வந்து உள்ளனர். மேலும் டவுன்ஹால் ராஜ வீதி பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்ட போலீசார் தேர் செல்லும் வழிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோனியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி மாவட்ட ஆட்சியர் பவன் குமார் இந்த பகுதியில் உள்ள 24 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உள்ளார். அதேபோல கோனியம்மன் கோவில் தேர் விழா காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர் திருவிழா நிகழ்ச்சிக்கு வரும் பக்தர்களுக்கு தனியார் அமைப்பு, இஸ்லாமிய அமைப்பு, பொதுநல அமைப்புகள் மூலம் அன்னதானம் நீர் மோர் குடிநீர் ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. கோனியம்மன் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள பூக்கம்பத்தில், அக்னிச்சாட்டு நிகழ்ச்சியும், விநாயகர், சூலத்தேவர், அம்மன் கோவிலில் இருந்து சப்பரத்தில் திருவீதி உலாவும் நடந்தது. கடந்த பிப்ரவரி 26 முதல், புலி, கிளி, சிம்ம, அன்னம், காமதேனு, வெள்ளை யானை வாகனத்திலும் அம்மன் திருவீதி உலா நடந்தது.
நேற்று இரவு அம்மனுக்கு, திருக்கல்யாண வைபவம் நடந்தது. வழக்கமான வைதீக முறைப்படி கலாசாரமும் பண்பாடும் மாறாமல், திருக்கல்யாண வைபவம் நடந்தது. பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும், மங்கல தாம்பூலம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தேர் திருவிழா விழாவையொட்டி ஒப்பணக்கார விதி ராஜவீதி வைசியால் விதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

