

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணைக்காக எஸ்டேட் மேலாளர் நடராஜன் இன்று கோவை காந்திபுரத்தில் அமைந்து உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார்.

நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 23 – ம் தேதி நள்ளிரவு கொலை, கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது. இது தொடர்பாக ஊட்டி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் கடந்த 2022 – ம் ஆண்டு முதல் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். CBCID ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான காவல் துறையினர் இதுவரை சுமார் 250 பேரிடம் வாக்குமூலம் பெற்று உள்ளனர். கடந்த ஆண்டு இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்படும் எஸ்டேட் மேலாளர் நடராஜனுக்கு கடந்த முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் கடந்த முறை விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், இன்று கோவை காந்திபுரம் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். நடராஜன் சசிகலா குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்பதால் அவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த விசாரணையில் கொடநாடு எஸ்டேட்டில் உள்ள சி.சி.டி.வி, சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சர்ச்சை மற்றும் இது போன்ற பல முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

