• Tue. Oct 8th, 2024

கொடநாடு வழக்கு விசாரணை அதிகாரி திடீர் பணியிடை மாற்றம்

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த குன்னூர் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ், திடீரென தேனி மாவட்டத்திற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள கொடநாடு தேயிலை தோட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. அதில் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த வழக்கை விசாரணை நடத்தி வந்த மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா இரண்டு நாட்களுக்கு முன்பு தேனி மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியிடைமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில், நீலகிரி மாவட்ட புதிய நீதிபதியாக சென்னையில் உள்ள தொழில்துறை தீர்ப்பாயத்தின் நீதிபதி முருகன் நியமிக்கப்பட்டார். ஏற்கனவே கொடநாடு வழக்கை முன்பு விசாரித்த நீதிபதி வடமலை பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் மாவட்ட நீதிபதி பணியிடை மாற்றம் செய்யப்பட்டது குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, மீண்டும் பணியிடை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த முறை கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த குன்னூர் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் மாற்றப்பட்டுள்ளார். அவர் தேனி மாவட்டத்திற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பட்டியல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதில் நீலகிரி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சந்திர சேகர், குன்னூர் டி.எஸ்.பி.யாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணை நடத்தி வரும் தனிப்படையில் டி.எஸ்.பி. சுரேஷ் இடம் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *