கொடைக்கானலில் 4 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் குவிய ஆரம்பித்துள்ள நிலையில் வனத்துறை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கொரோனா 2வது அலை காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்த தமிழக அரசு, சுற்றுலாதளங்களுக்குச் செல்ல அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்குப் பிறகு வாரவிடுமுறை நாளான நேற்று கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிய ஆரம்பித்தனர். கொடைக்கானலில் நேற்று காலை முதலே பலத்த காற்றுடன் குளிர் நிலவியது. வெள்ளி நீர்வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ்வாக் உள்ளிட்ட சுற்றுலா இடங்களை பயணிகள் கண்டு ரசித்தனர் .
சுற்றுலாத்தலங்கள் திறக்கப் பட்ட நிலையில் நீண்ட இடை வெளிக்குப்பிறகு விடுதிகள் நிரம்பின. ஆனால், விடுதிகளில் கட்டண உயர்வு சுற்றுலாப் பயணிகளை அதிருப்தி அடையச் செய்தது. மேலும் பல இடங்களில் வாகனங்கள் அணிவகுத்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவ்வப்போது பெய்த சாரல் மழை சுற்றுலா பயணிகளை மேலும் குஷியாக்கியது.
இந்நிலையில் கொடைக்கானலில் நான்கு மாதங்களுக்கு பிறகு வனத்துறையினரின் கட்டுபாட்டில் உள்ள குணா குகை,மோயர் சதுக்கம்,பைன் மர சோலை,பில்லர் ராக் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் நாளை முதல் திறக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.