• Thu. Apr 24th, 2025

சொத்துக்களை அபகரிக்க கள்ளக்காதலனின் மகனை கடத்தி கொலை முயற்சி

BySeenu

Mar 17, 2025

பல கோடி ரூபாய் சொத்துக்களை அபகரிப்பதற்காக வாலிபரை கடத்திச் சென்று பெண் ஒருவர் கொலை முயற்சி செய்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுளளது.

கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் குமார். இவரது மகன் ஆகாஷ் தீப் (33). அரவிந்த் குமாரின் மனைவி விவாகரத்து பெறாமல் கணவரை புரிந்து சென்று விட்டார். ஆகாஷ் தீப் திருமணத்திற்கு பின்னர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சரவணம்பட்டி பகுதியில் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரவிந்த் குமாருக்கு சாந்தி என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆகாஷ் தீப் தனது தந்தை அரவிந்த் குமாரின் வீட்டிற்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அரவிந்த் குமார் மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக அவரது மகன் ஆகாஷ் தீப்பிற்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஆகாஷ் தீப் தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அவரது தந்தையின் கள்ளக்காதலி சாந்தி மற்றும் அவரது கூட்டாளிகள் இருந்துள்ளனர். பின்னர் அரவிந்த் குமாரின் உடலை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்துள்ளனர். சில நாட்கள் கழித்து ஆகாஷ் தீப்பிற்கு செல் போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது.

அதில் பேசிய பெண் ஒருவர் தான் அரவிந்த் குமாரின் வீட்டில் வேலைக்கு இருந்ததாகவும், அரவிந்த் குமாரை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு அதை மறைப்பதற்காக மயானத்தில் தகனம் செய்திருப்பதாகவும், அரவிந்த் குமாரை கொலை செய்வதற்கு முன்பு வீட்டில் இருந்த நாய்க்கு விஷம் கொடுத்து ஒத்திகை பார்த்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு ஆகாஷ் தீப் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதே சமயத்தில் தந்தை அரவிந்த் குமாருக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுக்கு சாந்தி மற்றும் அவரது மகள் ஆகியோர் மட்டுமே வாரிசு என போலியான ஆவணங்களை கொடுத்து வாரிசு சான்றிதழையும் பெற்ற விபரம் ஆகாஷ் தீப்பிற்கு தெரிய வந்தது.

மேலும், சில சொத்துக்களை ஆகாஷ் தீப்பிற்கு தெரியாமலும் விற்பனையும் செய்துள்ளனர். இதுகுறித்து ஆகாஷ் தீப் சாந்தி மற்றும் அவரது கூட்டாளிகளிடம் நேரில் சென்று கேட்டுள்ளார். அப்போது இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சாந்தி மற்றும் அவரது கூட்டாளிகள் ஆகாஷ் தீப்பை கடத்திச் சென்று தனி இடத்தில் வைத்து அடித்து உதைத்து துன்புறுத்தி மிரட்டி உள்ளனர்.

அப்போது சாந்தி மற்றும் அவரது கூட்டாளிகள், கடத்திச் சென்ற நபர் ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் வீடியோ கால் செய்து ஆகாஷ் தீப்பை உடனடியாக கொலை செய்ய உத்தரவிட்டு உள்ளனர். ஆனால் ஆகாஷ் தீப்பை கடத்திச் சென்ற நபர்கள் பயந்து போயி அவரை விடுவித்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

கடத்தல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஆகாஷ் தீப் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் சரியான ஆதாரங்கள் இல்லை என போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் விட்டு விட்டனர். இதற்கிடையே சாந்தி மற்றும் அவரது கூட்டாளிகள் அரசு வேலை வாங்கித் தருவதாக ஏராளமானோரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் ஆகாஷ் தீப் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பயந்து தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவிற்கு சென்று விட்டார்.

கடந்த வாரம் தனது சொத்துக்களை சாந்தி உள்ளிட்டோர் மோசடியாக விற்க முயற்சி செய்து வருவதாகவும், தனது தந்தை இறப்பில் உள்ள மர்மம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆகாஷ் தீப் கடத்தப்பட்ட போது சாந்தி வாட்ஸ் அப் வீடியோ காலில் பேசியதை கடத்தல் கும்பல் வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளனர். தற்போது அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.