• Fri. Mar 29th, 2024

பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்களை கண்காணிக்க வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை

படிக்கட்டிகளில் தொங்கிக்கொண்டு பயணிக்கும் பள்ளி மாணவர்களை கண்காணிக்கும் வகையில் சிறப்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அன்றாடம் கல்வி கற்பதற்காக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பேருந்து, சைக்கிள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றில் பள்ளிக்கு சென்று வருகின்றனர். அரசு பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் சைக்கிள் மற்றும் பேருந்துகளிலேயே பள்ளிக்கு வருகின்றனர். இந்நிலையில், பேருந்தில் பயணிக்கும் ஒரு சில மாணவர்கள் பேருந்தின் உள்ளே இடமிருந்தாலும் கூட படிகட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.

மேலும் ஒருசிலர் படிக்கட்டில் தொங்கியபடி காலை ரோட்டில் வைத்து தேய்த்தபடி செல்கின்றனர். இது அந்த மாணவர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக அமைகிறது. இதனை நடத்துடனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கண்டித்த போதும் மாணவர்கள் அதனை பொருட்படுத்துவதில்லை. ஒரு சில மாணவர்கள் தங்களை கண்டிக்கும் நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது கும்பலாக சேர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் வன்முறை சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி பயணம் செய்வதை தடுக்கும் நடவடிக்கைகளில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், பேருந்துகளில் பள்ளிகளுக்கு வந்துசெல்லும் மாணவர்களை கண்காணிக்க சிறப்பு அலுவலர்கள் நியமிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. படிக்கட்டிகளில் தொங்கிக்கொண்டு பயணிப்பது, பொது அமைதிக்கு ஊறு விளைவிப்பது, மாநகர பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மீது தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களை தனியாகக் கண்டறிந்து அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *