• Sun. Mar 16th, 2025

மதுரையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில், கருணாநிதி விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா

Byகுமார்

Feb 18, 2024

மதுரையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் கருணாநிதி விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா அமைச்சர் உதயநிதி தலைமையில் நடந்தது. அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, இளைஞர் நலன், விளையாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலர் அதுல்ய மிஷ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத்ரெட்டி, கலெக்டர் சங்கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் உதயநிதி பேசியதாவது:
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் கருணாநிதி விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை இந்த மண்ணில் துவங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 620 கிராம ஊராட்சிகளுக்கு 86 கோடி ரூபாய் மதிப்பில் 33 வகையாள விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது.
கடந்த ஆண்டு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை மிகச் சிறப்பாக நடத்தி முடித்தோம். தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறை கிராமம் முதல் நகரம் வரை அனைத்து இடங்களிலும் செயல்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள மாணவர்ளின் விளையாட்டு திறமைகளை கண்டறிவதற்காக முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு 3 லட்சத்துக்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் அந்த போட்டிகளில் கலந்து கொண்டனர்.
ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு உதவவே தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுன்டேசன் திட்டத்தை துவக்கி பல உதவிகளை செய்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இந்த கருணாநிதி விளையாட்டு உபகரணங்களை வழங்குகிறோம். படிப்படியாக இந்த திட்டம் மாநிலத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் கொண்டு செல்ல உள்ளோம்.
இந்த விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், புத்துணர்ச்சியுடன் திகழ வேண்டும். முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பெயரால் எத்தனையோ திட்டங்கள் இருந்தாலும், நம்முடைய விளையாட்டுத்துறை சார்பில் ஒரு திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றால் அந்த துறையின் அமைச்சர் என்பதில் பெருமையடைகிறேன்.
கலைஞர் கருணாநிதி சிறந்த அரசியல்வாதி, இலக்கியவாதி, பேச்சாளர், எழுத்தாளர் என பல முகங்கள் உண்டு. ஆனால் விளையாட்டுக்கும், கருணாநிதிக்கும் என்ன தொடர்பு. ஏன் அவர் பெயரை வைக்க வேண்டும் என சிலர் கேட்கலாம்.
கலைஞர் கருணாநிதி சிறுவயதிலேயே களத்தில் இறங்கி பல்வேறு விளையாட்டுகளை விளையாடியவர். அதன் பிறகு தான் அரசியல் ஆடுகளத்தில் இறங்கினார். கலைஞர் கருணாநிதி ஆர்வமிக்க விளையாட்டு ரசிகர். கிரிக்கெட், கால்பந்து என எந்த போட்டியாக இருந்தாலும் நெருக்கடியான நேரத்திலும் டிவியில் பார்த்து ரசிப்பவர்.
அதையெல்லாம் விட இந்த திட்டத்திற்கு அவர் பெயரை சூட்டுவதற்கான காரணம் என்னவென்றால், ஒரு விளையாட்டு வீரனுக்கு இருக்க வேண்டிய அத்தனை திறமைகளும் கலைஞர் கருணாநிதியிடம் இருந்தது என்பதுதான் சிறப்பு.
ஒரு விளையாட்டு வீரனுக்கு புத்துணர்ச்சி, உடல் ஆரோக்கியம், உறுதியான சிந்தனை, தோல்வியை கண்டு துவழான மனம், டீம் ஒர்க் வேண்டும். இவை அனைத்துமே கலைஞர் கருணாநிதியிடம் இருந்தது.
வசதிகள் இல்லாத அந்த காலத்திலேயே கிராமம், கிராமமாக சுற்றி வந்து கட்சியை வளர்த்தவர் கருணாநிதி. ஒரே நேரத்தில் அரசியல், சினிமா, இலக்கியம் என அனைத்துலுமே பணியாற்றியது கலைஞர் கருணாநிதியின் எனர்ஜிக்கு உதாரணம். சோர்வு என்பதே இல்லாமல் கடுமையான பயிற்சியே விளையாட்டு வீரனாக்கும்.
கருணாநிதிக்கு இருக்கும் ஷார்ப் மைன்ட் என்ன பேசுகிறோம், எதிரில் இருப்பவர் என்ன கேட்கிறார், அவருக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என முன்கூட்டியே சிந்தித்து செயல்படக்கூடியவர் கருணாநிதி. விளையாட்டு வீரனுக்கு அந்த திறமை வேண்டும். எதிரணியினர் எப்படி விளையாடுகின்றனர். அவர்களுக்கு எப்படி பதிலடி கொடுக்கும் வகையில் விளையாட வேண்டும் என சிந்தித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
தோல்வியாக இருந்தாலும், வெற்றியாக இருந்தாலும் சமமாக பார்ப்பவர் கருணாநிதி. தொடர்ந்து உழைத்துக் கொண்டிருந்தால் வெற்றி நிச்சயமாகும் என்ற குறிக்கோளுடன் உழைத்தவர் கலைஞர் கருணாநிதி. அதே மன உறுதியுடன் செயல்பட வேண்டும். கலைஞர் கருணாநிதி போல் கூட்டு முயற்சியில் ஈடுபட்டவரை யாரும் பார்க்க முடியாது. அவரிடம் பேச்சாளர்கள், சிந்தனையாளர்கள் என மிகப்பெரிய கூட்டணியே இருந்தது.
அவருக்கு பிறகு நமது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அதனை சிறப்பாக வழி நடத்தி வருகிறார். விளையாட்டிலும் வீரர்கள் நல்ல டீமை அமைத்துக் கொள்ள வேண்டும். அதுபோல் அமைந்து விட்டால் நாம் பாதி வெற்றி பெற்று விட்டோம் என சொல்லலாம்.
கலைஞர் கருணாநிதி பெயரால் வழங்கப்படும் உபகரணங்களை பெறும் விளையாட்டு வீரர்களிடம் நான் கேட்டுக் கொள்வதென்னவென்றால், கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு இருந்த குணங்கள், திறமைகளை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான். இங்கு வழங்கப்படும் விளையாட்டு உபகரணங்களை பெறும் வீரர், வீராங்கணைகள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். சிறந்த திறமையாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களை மேலும் ஊக்குவிக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வழிவகை செய்யப்படும்.
மதுரை மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மேம்பாட்டிற்காக இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மதுரையில் 44 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு மைதானத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கேலோ விளையாட்டுப் போட்டிகளை சென்னை, மதுரை, திருச்சி, கோவையில் நடத்தினோம்.
இப்போட்டிகளில் தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழ்நாடு இரண்டாம் இடம் பிடித்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஒருங்கிணைந்த விளையாட்டு அறிவியல் மையம் திறக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட விளையாட்டு அரங்கில் 6 கோடி ரூபாய் மதிப்பில் ஒலிம்பிக் அகாடமி அமைக்க ஏற்பாடுகள் நடக்கிறது. ஒலிம்பிக் வீராங்கணை ரேவதி போன்ற தடகள வீரர்கள் பயன்படும் வகையில் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான செயற்கை சிந்தடிங் ஓடுதளம் 8.10 கோடி மதிப்பில் அமைய உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் ஒரு மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என துறை சார்பில் அறிவித்தோம். அதன்படி மதுரை சோழவந்தா தொகுதியில் 3 கோடி ரூபாய் மதிப்பில் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் நடக்கிறது. விரைவில் பயன்பாட்டிற்கு வரும்.
வெற்றி என்பது சுலபமாக கிடைக்காது. நீண்ட தூரம் ஓடினால் தான், அதிக உயரம் தாண்ட முடியும் என கலைஞர் சொல்வார். எனவே விளையாட்டு துறை மட்டுமல்ல நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள எந்த துறையாக இருந்தாலும் இளையதலைமுறையினர் அதற்காக உழைக்க வேண்டும்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை பல்வேறு பணிகளுக்கு எடுத்துக் காட்டாக சென்ற மாதம் சிஐஐ என்ற அமைப்பு இந்தியாவிலேயே விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்வதாக அறிவித்து விருது வழங்கியது.
இந்த விளையாட்டு உபகரணங்களை மதுரையில் வழங்குவதற்கு காரணம் உள்ளது. கடந்த ஆண்டு பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மதுரையில் 1360 கிரிக்கெட் வீரர்களுக்கு எனது தலைமையில் உபகரணங்களை வழங்கினார். அதனால் தான் எனது துறையின் சார்பில் மதுரையில் முதன்முதலாக இந்த நிகழ்ச்சியை நடத்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக மதுரை விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த அறிவியல் மைய கல்வெட்டை திறந்து வைத்தார். முன்னதாக ஒலிம்பியாட்டில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற யாதவர் கல்லூரி மாணவி ரேவதிக்கு பாராட்டு தெரிவித்தார்.