• Thu. May 9th, 2024

முயற்சி என்பது இடைவிடாது தொடர வேண்டும் – எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேச்சு…

ByKalamegam Viswanathan

Feb 19, 2024

முயற்சி என்பது இடைவிடாது தொடர வேண்டும் *எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேச்சு ஒவ்வொருவருக்கும் முயற்சி என்பது இடைவிடாது தொடர வேண்டும் என்று மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க விழாவில் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:

ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சார்பில் சிறப்பு கூட்டம் மதுரை யூனியன் கிளப் அருகில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கத் தலைவர் நெல்லை பாலு தலைமை தாங்கினார் விழாவில் பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கலைமாமணி லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உங்களால் முடியும் என்ற தலைப்பில் பேசினார். நிகழ்வில் அவருக்கு ரோட்டரியின் உயரிய விருதான வொக்கேஷனல் எக்ஸலன்ஸ் அவார்டு வழங்கப்பட்டது இதனை ரோட்டரி மாவட்ட ஆளுநர் தேர்வு பேராசிரியர் ராஜா கோவிந்தசாமி வழங்கினார். விழாவில் கலைமாமணி லேனா தமிழ்வாணன் பேசியதாவது நமக்குள் இருக்கும் ஆற்றல் பல நேரங்களில் நமக்கே தெரிவதில்லை பிறர் சுட்டிக்காட்டும் போது தான் தெரிய வருகிறது. எனக்கு பத்திரிக்கை நடத்த ஆற்றல் உள்ளது என நம்பி கல்கண்டு இதழை கொடுத்தார் எஸ்.ஏ.பி அண்ணாமலை. பிறர் நம்மை நம்பும்போது அந்த வாய்ப்பை சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும் முயற்சி என்பது இடைவிடாது தொடர வேண்டும். முயல் வெல்வதும் சில சமயம் முயலை ஆமை வெல்வதும் பள்ளி நாட்களில் படித்திருக்கிறோம். ஆனால் முயலாமை ஒருபோதும் வெற்றி பெறாது. தோல்வி மனப்பான்மை இல்லாத முயற்சிகள் தேவை.நன்கு படித்தும் நன்கு தயார் செய்தும் மாணவர்கள் சிலர் குறைந்த மதிப்பெண்களே எடுக்க நாம் தோற்று விடுவோமோ என்கிற சந்தேகத்துடன் தேர்வை அணுகுவது தான் காரணம். விரைவில் நடைபெற உள்ள பத்தாவது மற்றும் பிளஸ் டூ தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு ஒன்றைச் சொல்ல வேண்டும். உங்கள் வருங்காலத்தை நிர்ணயிக்கப் போகிற இந்த சில நாட்களை தேர்வு கண்ணோட்டத்தில் மட்டுமே செலவழிக்க வேண்டும். உங்கள் வெற்றிக்கு வாழ்த்தும் அதே வேளையில் தோல்வி கண்டும் பயந்து விடக்கூடாது. ஒரு மாணவனின் கல்வி வாழ்வில் ஓரிரு வருடம் இழப்புகள் ஒன்றும் பெரிதல்ல.. இதற்காக உயிரை மாய்த்துக் கொள்வதை ஏற்க முடியாது. நம் முயற்சிகளை கேலி செய்கிறவர்களை பார்த்து நாம் தயங்கி விடுகிறோம். வெற்றி பெற்றால் கூட இவனை பற்றி எனக்கு தெரியாதா என்று கேலி செய்கிறவர்கள் இருக்கிறார்கள். இவர்களை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது.கடுமையான போட்டிகளை கண்டு அஞ்சி முயற்சியை கைவிடுபவர்கள் உண்டு. போட்டியாளர்களை நமக்கு உத்வேகம் தருகிற சக்திகள் ஆக பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேசினார். விழாவில் எழுத்தாளர் லேனா தமிழ்வாணனை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க பொருளாளர் எஸ்.கதிரவன் அறிமுகம் செய்தார். முடிவில் செயலாளர் எஸ் எஸ் சரவணன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *