சிதம்பரம் (தனி) மக்களவைத் தொகுதியில் விசிக தலைவர் தொல்.திருமாவளவனுக்கு எதிராக, பாஜக வேட்பாராக முன்னாள் மேயர் கார்த்தியாயினி போட்டியிடுகிறார்.
தமிழக பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் நேற்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில், வட சென்னை – பால் கனகராஜ், திருவண்ணாமலை – அஸ்வத்தாமன், நாமக்கல் – .பி.ராமலிங்கம், திருப்பூர் – ஏ.பி.முருகானந்தம், சிதம்பரம்(தனி) – கார்த்தியாயினி, விருதுநகர் – ராதிகா சரத்குமார், தென்காசி – ஜான் பாண்டியன், புதுச்சேரி – நமச்சிவாயம் உள்ளிட்டோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், குறிப்பாக பாஜக வேட்பாளராக வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயர் கார்த்தியாயினி சிதம்பரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வேலூர் மாநகராட்சி தேர்தலில் 2011ம் ஆண்டு அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கார்த்தியாயினி சுமார் கிட்டத்தட்ட ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ராஜேஸ்வரியை தோற்கடித்து மேயராக தேர்வு செய்யப்பட்டார். அவர் மேயராக இருந்தபோது தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பு வழங்கினார். நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அதிமுகவினர் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அப்போது மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பையும் விமர்சித்தும், எதிர்த்தும் மாநகராட்சியில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி கார்த்தியாயினி அரசியல் அரங்கை அதிரவிட்டது மட்டுமல்லாமல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து நீதிபதியை விமர்சித்தன் காரணமாக அவர் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து கார்த்தியாயினி பகிரங்க மன்னிப்பு கேட்டது மட்டுமல்லாமல் பத்திரிகையில் செய்தியாக வெளியிடப்பட்டது.
அதன்பின் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக ஓரம் கட்டப்பட்டதை அடுத்து கார்த்தியாயினி பாஜகவில் இணைந்தார். அவருக்கு தற்போது சிதம்பரம் மக்களவை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும், அதிமுக சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தின் இலக்கிய அணி செயலாளர் சந்திரகாசனும் போட்டியிடுகின்றனர்.